இந்தியாவில் ஸ்டார்லிங்க் மற்றும் அமேசானின் செயற்கைக்கோள் இணைய வெளியீடு தாமதாகிறது; காரணம் என்ன?
தொலைத்தொடர்புத் துறை கூடுதல் பாதுகாப்பு இணக்கத்தைக் கோரியதால், இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் மற்றும் ஜெப் பெசோஸின் அமேசான் மூலம் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் செயற்கைக்கோள் இணையத்திற்கான விலை நிர்ணயம் குறித்த பரிந்துரைகளை அழைத்திருந்தாலும், தொலைத்தொடர்புத் துரையின் புதிய விதிமுறைகள் இந்த திட்டத்தை ஒத்திவைக்கலாம். ஸ்டார்லிங்க் மற்றும் அமேசான் இணைய சேவைகளுக்கு தொலைத்தொடர்புத் துறை முறையான அறிவிப்புகளை வெளியிட்டு, முக்கியமான பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை முடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. ஏர்டெல்லின் யூடெல்சாட் ஒன்வெப் மற்றும் ஜியோவின் எஸ்இஎஸ் ஏற்கனவே செயற்கைக்கோள் சேவைகளுக்கான அனுமதிகளைப் பெற்றுள்ளன. ஆனால் ஸ்டார்லிங்க் மற்றும் அமேசானின் நிலுவையில் உள்ள சமர்ப்பிப்புகள் ஒரு ஒழுங்குமுறை தடையாக மாறியுள்ளன.
வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் தொலைத்தொடர்புத் துறை
தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி, முக்கிய பகுதிகளில் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை தொலைத்தொடர்புத் துறை வலியுறுத்தி உள்ளது. செயற்கைக்கோள் இணைய சேவை வழங்குநர்கள் இந்திய சந்தையில் செயல்படுவதற்கு முன் தரவு பாதுகாப்பு நெறிமுறைகள், கவரேஜ் பகுதிகள் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை விவரிக்க வேண்டும். இந்த ஆவணங்களின் விரிவான மதிப்பாய்வுக்குப் பிறகுதான் ஸ்டார்லிங்க் மற்றும் அமேசான் சேவைகளுக்கு தேவையான அனுமதிகளை மத்திய அரசு வழங்கும். இதற்கிடையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் குறித்த தொழில்துறை கருத்துக்களை சேகரித்து வருகிறது. ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் செயற்கைக்கோள் மற்றும் தரைவழி இணைய சலுகைகளை விரிவுபடுத்துவதால், இந்தியாவின் செயற்கைக்கோள் இணையத் துறையில் போட்டி தீவிரமடைந்துள்ளது.