வெள்ளி கோள் குறித்த நீண்ட கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வுக் கட்டுரை
பூமிக்கு அடுத்திருக்கும், உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாகக் கருதப்படும் வெள்ளி கிரகத்தின் (Venus) மீது ஆராய்ச்சியாளர்கள் எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், வெள்ளி கிரகத்தில் ஏற்படும் குறிப்பிட்ட நிகழ்வு குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சூரியனை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய பார்க்கர் சூரிய ஆய்வுக்கலமானது, 2021ம் ஆண்டு வெள்ளியைக் கடந்து பறந்து சென்றது. அப்படி கடக்கும் போது, வெள்ளி குறித்த பல்வேறு தகவல்களை அந்த ஆய்வுக்கலமானது சேகரித்து பூமிக்கு அனுப்பியது. அந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே அந்தக் கோள் குறித்த புதிய ஆய்வுக் கட்டுரையானது தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. கொலரடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி அறிவியலாளர்கள் இந்த ஆய்வுக் கட்டுரையை Geophysical Research Letters ஆய்விதழில் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது என்ன?
பார்க்கர் சூரிய ஆய்வுக்கலமானது, 2021ம் ஆண்டு வெள்ளி கோளைக் கடக்கும் போது, அக்கோளில் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட, மிக அதிக அளவிலான மின்காந்த அலைகளைப் பதிவு செய்திருக்கிறது. பூமியிலும் மின்னல் தோன்றும் போது இந்த வகையான அலைகள் தோன்றும். இந்த வகையான மின்காந்த அலைகளை 'விஸ்லர் அலைகள்' எனக் குறிப்பிடுவார்கள் அறிவியலாளர்கள். பூமியிலும் தோன்றும் விஸ்லர் அலைகளின் அடிப்படையில், வெள்ளி கிரகத்தில் மின்னல் தோன்றுமா தோன்றாதா என்ற விவாதம் பல ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது. ஆனால், தற்போது பார்க்கர் சூரிய ஆய்வுக்கலண் பதிவு செய்த விஸ்லர் அலைகளைக் கொண்டு, புதிய கோட்பாடு ஒன்றை முன்வைக்கிறார்கள் அவர்கள்.
என்ன கோட்பாட்டை முன்வைக்கிறார்கள் விஞ்ஞானிகள்?
வெள்ளி கோளில் மின்னல் தோன்றும் போது, உருவாகக்கூடிய விஸ்லர் அலைகள் பதிவு செய்யப்பட்டாலும், மின்னல் தோன்றும் போது உருவாகக்கூடிய ரேடியோ அலைகள் எதையும் பார்க்கர் ஆய்வுக்கலம் பதிவு செய்யவில்லை. எனவே, வெள்ளியில் மின்னல் தோன்றுவதால் இந்த விஸ்லர் அலைகள் உருவாகியிருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. மாறாக, வெள்ளியைச் சுற்றியிருக்கக்கூடிய மின்காந்த புலத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தால் இந்த விஸ்லர் அலைகள் உருவாகியிருக்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள் அவர்கள். இதனை உறுதி செய்ய கூடுதல் தகவல்களை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் புதிய ஆய்வுக் கட்டுரையை வெளியிட்ட அறிவியலாளர்கள். பார்க்கர் சூரிய ஆய்வுக்கலமானது 2024 நவம்பரில் மீண்டும் வெள்ளியைக் கடக்கும் போது, இதனை உறுதி செய்வதற்கான தகவல்களைப் பெறவும் அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.