விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்: 8 மாதம் விண்வெளியில் தங்கப்போகிறார்
செய்தி முன்னோட்டம்
விண்வெளித்துறையில் இந்தியாவின் பெருமையை உலகரங்கில் உயர்த்தும் வகையில், வரும் ஜூலை 14 அன்று கஜகஸ்தானின் பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவுள்ள 'சோயுஸ் எம்எஸ்-29' (Soyuz MS-29) விண்கலம் மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன் விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனத்தின் விண்வெளி வீரர்களான பியோத்தர் துப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோருடன் இணைந்து அவர் இந்த 8 மாத கால விண்வெளிப் பயணத்தைத் தொடங்குகிறார்.
விவரங்கள்
யார் இந்த டாக்டர் அனில் மேனன்?
மினசோட்டாவின் மினியாபோலிஸில் இந்திய மற்றும் உக்ரைனிய புலம்பெயர்ந்த பெற்றோருக்கு மகனாக பிறந்த அனில் மேனன், மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய இரு துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நியூரோபயாலஜியில் இளங்கலைப் பட்டமும், புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவப் பட்டமும் (MD) பெற்றவர். அமெரிக்க விண்வெளிப் படையின் கர்னலாகவும், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் மருத்துவர்
நாசாவின் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக, சர்வதேச விண்வெளி நிலையப் பணியாளர்களுக்கு நாசாவின் எக்ஸ்பெடிஷன் பிளைட் சர்ஜனாக அனில் மேனன் பணியாற்றியுள்ளார். மேலும், எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் விண்பயண மருத்துவராகப் பொறுப்பேற்று, அந்நிறுவனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'டெமோ-2' மனித விண்வெளிப் பயணத்திற்கான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கிக் கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. 2021-ல் நாசாவால் விண்வெளி வீரர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட இவர், 2024-ல் தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார்.
ஆராய்ச்சிகள்
விண்வெளியில் மேற்கொள்ளவிருக்கும் முக்கிய ஆராய்ச்சிகள்
விண்வெளி நிலையத்திற்கு சென்றடையவுள்ள அனில் மேனன், அங்கு மனிதர்களை நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதற்கான எதிர்காலத் திட்டங்களுக்கு உதவும் முக்கியமான சோதனைகளை மேற்கொள்ள உள்ளார். குறிப்பாக, புவியீர்ப்பு விசை இல்லாத மைக்ரோகிராவிட்டி சூழல் மனித உடலின் இரத்த நாளங்களின் கட்டமைப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த ஆராய்ச்சிகளை நடத்தவுள்ளார். மேலும், விண்வெளி நிலையத்தின் குடிநீரைப் பயன்படுத்தி அவசரக் காலத்திற்கான IV திரவங்களை உருவாக்கும் புதிய தொழில்நுட்பத்தையும் அவர் சோதனை செய்ய உள்ளார். அனில் மேனனின் மனைவி அன்னா மேனனும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளிப் பொறியாளராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.