LOADING...
உலகளவில் சரியும் பிறப்பு விகிதத்திற்கு காரணம் உங்கள் ஸ்மார்ட்ஃபோனா? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ரிப்போர்ட்
ஸ்மார்ட்போன்கள் தான் இந்த உலகளாவிய பிறப்பு விகித வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்

உலகளவில் சரியும் பிறப்பு விகிதத்திற்கு காரணம் உங்கள் ஸ்மார்ட்ஃபோனா? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ரிப்போர்ட்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 09, 2026
12:14 pm

செய்தி முன்னோட்டம்

பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் உயரும் போது, அங்கு பிறப்பு விகிதம் குறைவது வழக்கம். ஆனால், கடந்த 2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகம் முழுவதும் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக வேறுபாடுகள் கொண்ட நாடுகளிலும் ஒரே சீராக பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இதற்குக் காரணம் என்னவென்று தேடிய ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்துள்ள பதில் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நீங்கள் கையில் வைத்திருக்கும் ஐபோன் மற்றும் நவீன ஸ்மார்ட்போன்கள் தான் இந்த உலகளாவிய பிறப்பு விகித வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று இரண்டு புதிய ஆய்வுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.

ஆராய்ச்சி

அமெரிக்காவை உலுக்கிய 'AT&T' இயற்கை சோதனை

அமெரிக்காவின் 'நேஷனல் பீரோ ஆஃப் எகனாமிக் ரிசர்ச்'(NBER) வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, 1980 முதல் 2007 வரை அந்நாட்டின் பொதுவான மகப்பேறு விகிதம் 1,000 பெண்களுக்கு 65 முதல் 70 பிறப்புகள் என்ற அளவில் சீராக இருந்தது. ஆனால், 2024-ல் அது 54 ஆகக் குறைந்துள்ளது. இது 22% வீழ்ச்சியாகும். ஸ்மார்ட்போன்களின் தாக்கத்தைக் கண்டறிய, ஆராய்ச்சியாளர்கள் ஒரு சுவாரசியமான முறையைக் கையாண்டனர். ஐபோன் அறிமுகமான 2007 ஜூன் முதல் 2011 பிப்ரவரி வரை, அமெரிக்காவில் 'AT&T' நெட்வொர்க்கில் மட்டுமே ஐபோன்கள் வேலை செய்தன. அதன்படி, நெட்வொர்க் இல்லாத பகுதிகள்- 13.8% குறைவு; பகுதி கவரேஜ் உள்ள பகுதிகள்- 18.9%; முழு கவரேஜ் உள்ள பகுதிகள்-26% குறைவு.

ஐபோன்

ஐபோன் தாக்கம்

ஐபோன் மற்றும் அதிவேக இன்டர்நெட் வசதி அதிகம் இருந்த பகுதிகளில் வாழும் 15-19 வயதுடைய பெண்களிடையே பிறப்பு விகிதம் 4.5% முதல் 8% வரையிலும், 20-24 வயதுடைய பெண்களிடையே 3.2% முதல் 6.6% வரையிலும் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 2007-2011 காலகட்டத்தில் ஏற்பட்ட மகப்பேறு வீழ்ச்சிக்கு 33% முதல் 52% வரை ஐபோன் தான் காரணம் என இந்த ஆய்வு கூறுகிறது.

Advertisement

காரணங்கள்

ஸ்மார்ட்போன்கள் எப்படிப் பிறப்பு விகிதத்தைக் குறைக்கின்றன?

1. மனிதர்கள் நேரில் சந்தித்துப் பேசுவது 2003-ல் ஒரு நாளைக்கு சராசரியாக 68 நிமிடங்களாக இருந்தது, 2019-ல் 38 நிமிடங்களாக (44% வீழ்ச்சி) குறைந்துள்ளது. அதே நேரத்தில் கணினி மற்றும் போன்களில் செலவிடும் நேரம் 22 நிமிடங்களில் இருந்து 96 நிமிடங்களாக (336% உயர்வு) அதிகரித்துள்ளது. 2. ஸ்மார்ட்போன் வருகைக்குப் பின் இளைஞர்கள் மத்தியில் உடலுறவு கொள்ளும் ஆர்வம் குறைந்துள்ளது. அதற்குப் பதிலாக நீலப்படங்கள் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. கூகுளில் 'Porn' என்ற வார்த்தையைத் தேடுபவர்களின் எண்ணிக்கை இந்த ஆய்வுக் காலத்தில் இரட்டிப்பாகியுள்ளது. 3. ஸ்மார்ட்போன்கள் மூலம் கருத்தடை முறைகள் மற்றும் தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்கான தகவல்களை இளைஞர்கள் எளிதாகப் பெற்றுக்கொள்கின்றனர்.

Advertisement

தாக்கம்

இது அமெரிக்காவுக்கானது மட்டுமல்ல... உலகளாவிய தொழில்நுட்ப அதிர்ச்சி

'யுனிவர்சிட்டி ஆஃப் சின்சினாட்டி' பொருளாதார வல்லுநர்கள், உலக வங்கியின் தரவுகளைக் கொண்டு உலகெங்கிலும் உள்ள 128 நாடுகளில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் பிறப்பு விகிதத்தை ஆய்வு செய்தனர். வேறுபட்ட சுகாதாரக் கட்டமைப்பு, சட்டங்கள், மதக் கோட்பாடுகள் கொண்ட ஈரான், கோஸ்டாரிகா, குவாத்தமாலா, சிலி, மெக்சிகோ மற்றும் துருக்கி போன்ற நாடுகளிலும் ஸ்மார்ட்போன் பயன்பாடு பொதுமக்களிடையே அதிகரித்த அதே காலகட்டத்தில், பதின்ம வயதுப் பிறப்பு விகிதம் மிக வேகமாகச் சரிந்துள்ளது. இதை ஆராய்ச்சியாளர்கள் "பொதுவான உலகளாவிய தொழில்நுட்ப அதிர்ச்சி" என்று அழைக்கிறார்கள். பணக்கார நாடுகள் மட்டுமின்றி, நடுத்தர வருவாய் கொண்ட இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளிலும் தற்போது பிறப்பு விகிதம் மிக அதிவேகமாகச் சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement