ஏஐ யுகத்திற்கு ஏற்ப வணிகத்தை மாற்றும் ஜெர்மனியின் SAP நிறுவனம்: குறைந்தது 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்
செய்தி முன்னோட்டம்
ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான எஸ்ஏபி (SAP) செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் குறைந்தது 10,000 பணியிடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகம் முழுவதும் 1,10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள எஸ்ஏபி நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் குறைந்தது 9% பேர் இந்த ஆட்குறைப்பால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தொழில்நுட்பத் துறையில் பல முன்னணி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைத் தங்கள் செயல்பாடுகளில் ஒருங்கிணைத்து வரும் நிலையில் எஸ்ஏபி நிறுவனத்தின் இந்தத் திட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிக பாதிப்பு
தயாரிப்பு, பொறியியல் மற்றும் விற்பனைப் பிரிவுகளில் அதிக பாதிப்பு ஏற்படும் எனத் தகவல்
நிறுவனத்தின் அனைத்துத் துறைகளிடமும் ஆட்குறைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாகத் தயாரிப்பு மேம்பாடு பொறியியல் மற்றும் விற்பனை ஆகிய பிரிவுகள் மிக அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் பணிநீக்கம் செய்யப்பட உள்ள ஊழியர்களின் இறுதி எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி டொமினிக் ஆசம் இந்த ஆண்டில் ஊழியர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாகவும் அந்தப் போக்கு மாறாவிட்டால் ஆச்சரியப்படுவேன் என்றும் சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
நிர்வாகக் குழு மாற்றம்
சிஇஓ கிறிஸ்டியன் க்ளீனின் ஏஐ-முதன்மை உத்தியும் நிர்வாகக் குழு மாற்றங்களும்
நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிறிஸ்டியன் க்ளீன் எஸ்ஏபி மென்பொருள் தயாரிப்புகள் அனைத்திலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
மென்பொருட்களை உருவாக்குவது வடிவமைப்பது மற்றும் சந்தைப்படுத்துவது ஆகிய அனைத்திலும் ஏஐ தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும் வகையில் வணிக உத்தி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டில் மட்டும் 2 முறை நிறுவனத்தின் நிர்வாகக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளதோடு 6 நிர்வாகக் குழு உறுப்பினர்களில் 2 பேர் வரும் மார்ச் 2027-ல் நிறுவனத்திலிருந்து வெளியேற உள்ளனர்.
நிறுவனத்தின் விளக்கம்
2024 மறுசீரமைப்புப் பின்னணியும் எஸ்ஏபி நிறுவனத்தின் தற்போதைய விளக்கமும்
முன்னதாக 2024 ஆம் ஆண்டிலும் எஸ்ஏபி நிறுவனம் சுமார் 3 பில்லியன் யூரோ செலவில் 10,000 பணியிடங்களை மறுசீரமைப்பு செய்ததோடு புதிய திறன்களைக் கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்தியது.
பொதுவாக ஜனவரி மாதத்தின் இரண்டாவது பாதியில் முழு ஆண்டு நிதி முடிவுகளுடன் பெரிய மறுசீரமைப்புத் திட்டங்களை அறிவிப்பதை எஸ்ஏபி வழக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போதைய பணிநீக்க செய்தி குறித்து நேரடியாகக் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ள எஸ்ஏபி நிறுவனம் தனது உத்தி மற்றும் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப நிறுவனத்தைத் தொடர்ந்து மறுஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளது.