சீனாவில் வெளியானது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன், இந்தியாவில் விரைவில் அறிமுகம்
தங்களது புதிய ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனை சீனாவில் இன்று வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ். தற்போது சீனாவில் வெளியாகியிருக்கும் 'ஒன்பிளஸ் 12' மாடலை, வரும் ஜனவரியில் உலகளவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஒன்பிளஸ். சில மாதங்களுக்கு முன்பு வெளியான கூகுள் பிக்சல் 8 ப்ரோ, அடுத்து வெளியாகவிருக்கும் சாம்சங் கேலக்ஸி S24 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக இந்தப் ஒன்பிளஸ் 12-ஐ வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில், 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சத்தை வெளிப்படுத்தக்கூடிய 6.82-இன்ச் AMOLED டிஸ்பிளேவைக் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், IP65 ரேட்டிங் மற்றும் ரெயின் வாட்டர் டச் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கிறது ஒன்பிளஸ் 12.
ஒன்பிளஸ் 12: வசதிகள்
இந்தப் புதிய ஸ்மார்ட்போனின் பின்பக்கம், 50MP சோனி முதன்மைக் கேமரா, 48MP சோனி அல்ட்ரா வைடு சென்சார் மற்றும் 64MP ஆம்னிவிஷன் டெலிபோட்டோ பெரிஸ்கோப் கேமரா ஆகியவை அடங்கிய ட்ரிபிள் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் முன்பக்கம் 32MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. முந்தைய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது, சற்று மேம்படுத்தப்பட்ட கேமராவையே பெற்றிருக்கிறது புதிய ஒன்பிளஸ் 12. முக்கியமாக, இந்த முறை 24fps-ல் 8K வீடியோ பதிவு வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. கேமிங்கின் போது ஹேப்டிக் ஃபீடுபேக்கை மேம்படுத்த பயானிக் வைப்ரேஷன் சென்சிங் மோட்டார் டர்போ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒன்பிளஸ் 12: ப்ராசஸர் மற்றும் விலை
புதிய ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில், குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்செட்டான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். ஆண்ட்ராய்டு 14ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் இயங்குதளத்தைப் பெற்றிருக்கும் ஒன்பிளஸ் 12-லில், 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளுடன் கூடிய 5,400mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒன்பிளஸ் 12-ன் அடிப்படை வேரியன்டான 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலானது இந்திய மதிப்பில் சுமார் ரூ.50,000 விலையில் சீனாவில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒன்பிளஸ் 12-ன் டாப் எண்டான 24GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டானது இந்திய மதிப்பில் ரூ.68,000 விலையில் சீனாவில் வெளியாகியிருக்கிறது.