சூரிய குடும்பத்தில் காணாமல் போன பிரமாண்ட 'சூப்பர் எர்த்' கோளை இளம் வயதில் விழுங்கிய சூரியன்: அதிர்ச்சித் தகவல்
செய்தி முன்னோட்டம்
நமது சூரிய குடும்பத்தில் காணாமல் போனதாக கருதப்படும் பூமியை விட 5 முதல் 10 மடங்கு பெரிய பாறைக் கோளான 'சூப்பர் எர்த்' (Super-Earth), இளம் வயது சூரியனால் விழுங்கப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் ஈஜ் பல்கலைக்கழக பேராசிரியர் முட்லு யில்டிஸ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. பூமியை விட பல மடங்கு பெரிய கோள் ஒன்று சூரியனுக்குள் விழுந்ததால், சூரியனின் ஆழத்தில் இன்றும் அழியாத வேதியியல் அடையாளம் பதிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள் அமைப்பு மாற்றம்
சூரியனின் உள் அமைப்பில் மாற்றமும் லித்தியம் தனிமக் குறைபாடும் உணர்த்தும் தடயங்கள்
சூரிய குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி குறித்த வழக்கமான கணித மாதிரிகளுக்கும், நேரடி வானியல் ஆய்வுகளுக்கும் இடையே சில முரண்பாடுகள் இருந்து வருகின்றன.
குறிப்பாக சூரியனின் உட்புறக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நுட்பமான மாற்றங்களும், எதிர்பார்க்கப்பட்ட அளவை விட மிகக் குறைவாக உள்ள லித்தியம் தனிமத்தின் அளவும் விஞ்ஞானிகளுக்கு புதிராக இருந்தன.
இளம் சூரியன் ஒரு சூப்பர் எர்த் கிரகத்தை விழுங்கியதன் மூலமே இத்தகைய வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க முடியும் என ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
வானியற்பியல் மென்பொருள்
MESA வானியற்பியல் மென்பொருள் மூலம் நடத்தப்பட்ட உருவகப்படுத்துதல் சோதனை
இந்த கோட்பாட்டை சோதிப்பதற்காக நட்சத்திரங்களின் வாழ்க்கை சுழற்சியை ஆய்வு செய்யும் 'MESA' (Modules for Experiments in Stellar Astrophysics) என்ற திறந்த மூல மென்பொருளை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர்.
இளம் சூரியனுக்குள் பல்வேறு நிறையுடைய பொருட்கள் விழுந்தால் என்ன நடக்கும் என்பதை உருவகப்படுத்தி ஆய்வு செய்தனர்.
இதில் பூமியை விட 5 முதல் 10 மடங்கு நிறை கொண்ட கோள் ஒன்று சூரியனுடன் மோதியிருந்தால் மட்டுமே தற்போதைய சூரியனின் உள் அமைப்பு சாத்தியமாகும் எனத் தெரியவந்துள்ளது.
ஹீலியோசீஸ்மாலஜி
ஹீலியோசீஸ்மாலஜி மூலம் தடயங்களை உறுதிப்படுத்த விஞ்ஞானிகள் திட்டம்
இளம் சூரியனின் வெளிப்புற அடுக்குகளைக் கடந்து உள்ளே சென்ற அந்த பாறைக் கோள் கிட்டத்தட்ட சிதையாமல் ஆழத்திற்கு சென்றிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் அப்படி ஒரு கிரகம் உண்மையிலேயே சூரிய குடும்பத்தில் இருந்ததா என்பதை உறுதிப்படுத்த மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
இதற்காக சூரியனின் உட்புற அதிர்வுகளை ஆய்வு செய்யும் ஹீலியோசீஸ்மாலஜி உள்ளிட்ட நவீன முறைகளை பயன்படுத்தி அந்த அடையாளங்களை தனித்தனியாக கண்டறிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.