சந்திரயான் 3: என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கும்.. திட்டச் சுருக்கம்!
செய்தி முன்னோட்டம்
நான்கு வருடங்களாக இந்தியர்கள் அனைவரும் காத்திருந்த தருணம் இன்று நிறைவேறவிருக்கிறது. 2019 சந்திரயான் 2வின் தோல்விக்கு பின்பு செலுத்தப்பட்ட சந்திரயான்-3 இன்று நிலவில் தரையிறங்கவிருக்கிறகு.
இன்று மாலை, 6.04 மணிக்கு சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கவிருக்கும் நிலையில், சந்திரயான்-3 ஏவப்பட்டத்தில் இருந்து தற்போது வரை நடைபெற்ற நிகழ்வுகள், சந்திரயான்-3 திட்டத்தின் இலக்கு, ஆகியவற்றின் சிறிய தொகுப்பு தான் இது.
கடந்த ஜூலை 14, நண்பகல் 2.35 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான்-3.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே பூமிக்கும் நிலவுக்கு இடையிலான தூரம் குறைவாக இருக்கும் என்பதனால், இந்த மாதத்தில் சந்திரயான்-3யை ஏவத் திட்டமிடப்பட்டது.
சந்திரயான் 3
இஸ்ரோவின் தொடர் நடவடிக்கைகள்:
விண்ணில் ஏவப்பட்ட பிறகு, பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து வெளியேறுவது முதல் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைவது வரை, இஸ்ரோ மேற்கொண்ட சந்திரயான்-3யின் செயல்பாடுகள் அனைத்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன.
ஆகஸ்ட் 1-ம் தேதி பூமியின் புவியீர்ப்பு விசையில் இருந்து வெளியேறி, ஆகஸ்ட் 5-ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைக்கப்பட்டது சந்திரயான் 3.
அதனைத் தொடர்ந்து, சந்திரயான் 3யின் சுற்று வட்டப்பாதையின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு, ஆகஸ்ட் 17-ம் தேதி ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து தனியாகப் பிரிந்தது லேண்டர் மாடியூல்.
பின்னர் லேண்டர் மாடியூலையும், நிலவுக்கு மிக நெருக்கமான 25x134 கிமீ சுற்று வட்டப்பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலைநிறுத்தியது இஸ்ரோ.
சந்திரயான் 3
சந்திரயான் 3 திட்டத்தின் இலக்கு:
சந்திரயான் 3 திட்டத்தின் முதன்மையான இலக்குகள் இரண்டு தான். ஒன்று நிலவின் தென்துருவப் பகுதியில் மென் தரையிறக்கத்தை சாத்தியப்படுத்துவது. மற்றொன்று, நிலவின் மேற்பரப்பில் நம்முடைய ரோவரை இயக்குவது.
இந்தத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரஞ்யான் என்று பெயர் சூட்டியிருக்கிறது இஸ்ரோ.
சந்திரயான் 2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டரையே, இந்தத் திட்டத்திற்கும் பயன்படுத்துகிறது இஸ்ரோ. எனவே, சந்திரயான் 3 திட்டத்தில் தனியாக ஆர்பிட்டர் அனுப்பபடவில்லை.
மேற்கூறிய இலக்குகளைத் தவிர்த்து, லேண்டர் மற்றும் ரோவருடன் அனுப்பப்பட்டிருக்கும் அறிவியல் உபகரணங்களைக் கொண்டு அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வதும் இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய இலக்கு.
இதற்காக லேண்டரில் நான்கு, ரோவர் இரண்டு மற்றும் ப்ரொபல்ஷன் மாடியூலில் ஒரு அறிவியல் உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
சந்திரயான் 3
இந்த முறை தவறு நடக்க வாய்ப்புகள் இருக்கிறதா?
சந்திரயான் 2வில் ஏற்பட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, சந்திரயான் 3யை வடிவமைத்திருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.
இன்று மாலை 5.45-க்கு சந்திரயான் 3-யின் தரையிறக்கம் தொடங்கி, 6.04 மணிக்கு சந்திரயான் 3 தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை, லேண்டரில் உள்ள சென்சார்கள் மற்றும் பிற உபகரணங்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டாலும், தரையிறக்கத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்கும் வகையிலேயே சந்திரயான் 3 வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் இஸ்ரோ தலைவர்.
இன்று தரையிறக்க முடியாத சூழல் நிலவும் பட்சத்தில் நாளை மீண்டும் தரையிறக்க வகையில் மாற்றுத் திட்டங்களும் தயார் நிலையில் வைத்திருக்கிறது இஸ்ரோ.
சந்திரயான் 3
தரையிறங்கவில்லை என்றால் என்ன ஆகும்?
ஒரு வேளை இன்று தரையிறங்க முடியாத பட்சத்தில் விக்ரம் லேண்டரானது, தற்போது நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் அதே 25x134கிமீ சுற்று வட்டப்பாதையிலேயே வலம் வந்து கொண்டிருக்கும்.
சந்திரயான் 2வானது தரையிறக்கத்தின் போது, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு நிலவில் மோதியே தோல்வியடைந்தது. ஆனால், எந்த சூழ்நிலையிலும் நிலவில் மோதாத வகையில் சந்திரயான் 3 திட்டமிடப்பட்டிருக்கிறது.
இன்றும், நாளையும் தரையிறக்கம் செய்ய முடியவில்லை என்றாலும், அதற்கடுத்தும் தொடர்ந்து நிலவில் தரையிறக்கத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், தொடர்ந்து மென் தரையிறக்கத்தை சாத்தியப்படுத்த இஸ்ரோ முயற்சிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்து, மற்றொரு சாதனையைப் படைக்க இஸ்ரோவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் நமது நன்றிகளும், வாழ்த்துக்களும்.