'நிலவு குடிச்ச சிங்கங்கள்': சுயசரிதை எழுதியிருக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக தற்போது பதவி வகித்து வரும் சோம்நாத், தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சுயசரிதை புத்தகமாக எழுதியிருக்கிறார். கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பிறந்த, கேராளவிலேயே பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்த சோம்நாத், இந்த சுயசரிதைப் புத்தகத்தை தன்னுடைய தாய் மொழியான மலையாலத்திலேயே எழுதியிருக்கிறார். 'நிலவு குடிச்ச சிங்கங்கள்' என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கும் இந்த சுயசரிதைப் புத்தகத்தை வரும், நவம்பர் மாதம் வெளியிடவிருக்கிறார் அவர். தன்னுடைய வாழ்க்கைப் பயணமானது பல்வேறு இளைஞர்களையும் ஊக்கப்படுத்தி தன்னம்பிக்கையோடு எழுந்து ஓட வைக்கும் என தான் நம்புவதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் சுயசரிதை:
59 வயதாகும் சோம்நாத் கல்லூரி காலத்தில் பணத்திற்காக தான் பட்ட துயரங்களை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காக இந்த சுயசரிதைப் புத்தகத்தை எழுதவில்லை எனவும், கனவுகளை நோக்கி செல்லத் தயங்குபவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மட்டுமே இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் சோம்நாத். தனது இளவயது வாழ்க்கை தொடங்கி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மார்க் 3 மற்றும் சந்திரயான் 3 திட்டங்களைக் குறித்து அதில் குறிப்பிட்டிருக்கிறார் சோம்நாத். இன்னும் சொல்லப் போனால், சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியே தன்னை இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர்.