ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை கொண்ட ஐந்தாவது நாடாக மாறுகிறது இந்தியா; டிசம்பருக்குள் அறிமுகம் செய்ய திட்டம்
2030ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடையும் லட்சிய திட்டத்தைக் கொண்டுள்ள இந்திய ரயில்வே, அதன் ஒரு படியாக ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்களை நோக்கி மிகப்பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது. இந்திய ரயில்வே தனது முதல் முன்மாதிரி ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை வடக்கு ரயில்வே பிரிவில் இயக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 2024இல் வடக்கு ரயில்வே மண்டலத்தில் ஹரியானாவில் உள்ள சோனிபட்-ஜிண்ட் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் பசுமையான போக்குவரத்து அமைப்பிற்கு மாறுவதற்கான குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக உள்ளது. ஹைட்ரஜன் ஃபார் ஹெரிடேஜ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஹைட்ரஜன் ரயில்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஹைட்ரஜன் ஃபார் ஹெரிடேஜ் திட்டம்
ஹைட்ரஜன் ஃபார் ஹெரிடேஜ் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக பாரம்பரிய வழித்தடங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் 35 ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளைப் பயன்படுத்தி பூஜ்ஜிய உமிழ்வை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கும். இந்திய ரயில்வேயின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான போக்குவரத்து இலக்குகளை அடைய இந்த முயற்சி உதவும். ஹைட்ரஜன் ரயில்களுடன், மற்ற சுற்றுச்சூழல் திட்டங்களுடன் ஆற்றல் திறனை அதிகரிப்பதை இந்திய ரயில்வே நோக்கமாகக் கொண்டுள்ளது. HOG (ஹெட் ஆன் ஜெனரேஷன்) தொழில்நுட்பம் மற்றும் ரயிலில் பயன்படுத்தப்படும் எல்இடி விளக்கு ஆகியவை ஆற்றல் செயல்திறனை ஆதரிக்கும் பிற புதுமையான தீர்வுகளில் அடங்கும்.
சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயாரிப்பு
ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மேற்பார்வையில் சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரியில் ரயில் தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாக மூத்த ரயில் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இயக்கப்படும் 35 ரயில்கள் மாதேரன்-ஹில் ரயில்வே, டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே, கல்கா-சிம்லா ரயில், காங்க்ரா பள்ளத்தாக்கு மற்றும் நீலகிரி மலை ரயில் ஆகியவற்றின் வழித்தடங்களில் இயக்கப்படும் எனத் தெரிகிறது. வெற்றிகரமான சோதனைகளைத் தொடர்ந்து, நவீன தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவின் கலாச்சார மரபு ஆகியவற்றின் கலவையை வழங்கும் இந்த வழித்தடங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இயக்கப்படும் எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் மூலம், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களைக் கொண்ட நாடாக இந்தியா மாறும்.