விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு; ராணுவ பயன்பாட்டிற்கு 52 செயற்கைகோள்களை ஏவ மத்திய அரசு ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) பொதுமக்கள் மற்றும் ராணுவ பயன்பாடுகளுக்காக விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (எஸ்பிஎஸ்) பணியின் மூன்றாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த தலைமையகத்தின் கீழ் பாதுகாப்பு விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தால் கையாளப்படுகிறது. இந்த ஒப்புதல் குறித்து மத்திய அரசு மௌனம் சாதித்தாலும், சிசிஎஸ் அனுமதித்துள்ள திட்டத்தில் குறைந்தபட்சம் 52 செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதையில் மற்றும் புவிசார் சுற்றுப்பாதையில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த திட்டத்தில் ரூ. 26,968 கோடி செலவில், 21 செயற்கைக்கோள்களை இஸ்ரோவும், மீதமுள்ள 31 செயற்கைக்கோள்களை தனியார் நிறுவனங்களும் உருவாக்கி விண்ணில் செலுத்த உள்ளன.
எஸ்பிஎஸ் திட்டத்தின் பின்னணி
எஸ்பிஎஸ் திட்டத்தின் முதற்கட்டம் ஆனது 2001ஆம் ஆண்டு அப்போதைய வாஜ்பாய் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. மேலும் கார்டோசாட் 2ஏ, கார்டோசாட் 2பி, ஈரோஸ் பி மற்றும் ரிசாட் 2 ஆகிய நான்கு செயற்கைக்கோள்களை கண்காணிப்பதற்காக விண்ணில் செலுத்தியது. எஸ்பிஎஸ் 2 ஆனது 2013ஆம் ஆண்டில் ஆறு செயற்கைக்கோள்களான கார்டோசாட் 2சி, கார்டோசாட் 2டி, கார்டோசாட் 3ஏ, கார்டோசாட் 3பி, மைக்ரோசாட் 1 மற்றும் ரிசாட் 2ஏ ஆகியவற்றை விண்ணில் செலுத்தியது. இந்நிலையில், தற்போது புதிதாக திட்டமிடப்பட்டுள்ள எஸ்பிஎஸ் 3, அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா 52 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் என்பதைக் காட்டுகிறது. இதில் இந்தியாவின் முப்படைகளும் தங்கள் நிலம், கடல் அல்லது வான் சார்ந்த பணிகளுக்காக பிரத்யேக செயற்கைக்கோள்களைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.
செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி
இராணுவ செயற்கைக்கோள்களின் கூட்டு கட்டுமானம் மற்றும் ஏவுதலுக்கான ஒப்பந்தக் கடிதத்தில், மோடி அரசாங்கம் ஏற்கனவே ஜனவரி மாதம் கையெழுத்திட்டுள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் திறன்களைப் பெறுவது மற்றும் அதன் உள்கட்டமைப்பு கட்டுமானங்களைக் கண்காணிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவுடனான தரை மற்றும் கடல் எல்லையில் உள்ள எதிரிகளை முழுமையாகக் கண்காணிக்க முடியும். எஸ்பிஎஸ் 3 பணிக்கு, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 31 பிரிடேட்டர் ட்ரோன்களை இந்தியா வாங்குவதும் உதவும். முன்னதாக, மார்ச் 29, 2019 அன்று ஒரு இந்திய ஏவுகணை சுற்றுப்பாதையில் ஒரு நேரடி செயற்கைக்கோளை அழித்தபோது, இந்தியா தனது செயற்கைக்கோள் எதிர்ப்பு திறன்களை உலகிற்கு வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.