Loading...
கூகுள் ஜெமினியில் நேரிடையாக பிளிப்கார்ட் ஷாப்பிங்: 'Buy' பட்டனுடன் களமிறங்கும் புதிய AI அம்சம்
கூகுள் ஜெமினியில் நேரிடையாக பிளிப்கார்ட் ஷாப்பிங்

கூகுள் ஜெமினியில் நேரிடையாக பிளிப்கார்ட் ஷாப்பிங்: 'Buy' பட்டனுடன் களமிறங்கும் புதிய AI அம்சம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 28, 2026
06:48 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பண்டிகை கால விற்பனையை முன்னிட்டு, ஆன்லைன் ஷாப்பிங் முறையை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு தளங்களான ஜெமினி மற்றும் ஏஐ மோட் மூலம் நேரிடையாக பொருட்களை வாங்கும் புதிய வசதியை சோதித்து வருகிறது. இப்புதிய அம்சத்தின் கீழ், கூகுள் AI தேடலின் போது காட்டப்படும் பிளிப்கார்ட் தயாரிப்புகளுக்கு அருகே 'Buy' என்ற புதிய பட்டன் தோன்றும். பயனர்கள் இப்பட்டனை க்ளிக் செய்வதன் மூலம், கூகுள் தளத்தை விட்டு வெளியேறாமலேயே பிளிப்கார்ட்டின் செக்அவுட் பக்கத்திற்கு சென்று தங்களது ஆர்டரை உடனடியாக நிறைவு செய்ய முடியும். முதற்கட்டமாக, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டும் ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் மொபைல் பாகங்கள் ஆகிய பிரிவுகளில் இச்சோதனை நடத்தப்படுகிறது.

வியூகம்

UCP மற்றும் கூகுளின் வியூகம்

கூகுள் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஏஐ ஏஜென்ட்களை (AI Agents) ஒருங்கிணைக்க 'Universal Commerce Protocol' (UCP) என்ற திறந்தநிலை தொழில்நுட்பத்தை கொண்டு வந்தது.

இதன் தொடர்ச்சியாகவே பிளிப்கார்ட் உடனான இக்கூட்டு முயற்சி பார்க்கப்படுகிறது.

கூகுள் நிறுவனம் 2024-ஆம் ஆண்டில் பிளிப்கார்ட்டில் சுமார் 350 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதும் இப்புதிய முயற்சிக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

இந்த புதிய மாற்றத்தால், வாடிக்கையாளர்கள் வழக்கமான ஷாப்பிங் வலைதளங்கள் மற்றும் ஒப்பீட்டு தளங்களுக்கு சென்று தேடும் நேரம் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ள பண்டிகைக் கால விற்பனைக்கு முன் இச்சேவையை இந்தியாவில் பரவலாக விரிவுபடுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT