விண்ணில் ஏவப்படவிருக்கும் உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்!
செய்தி முன்னோட்டம்
தங்களது நீண்ட நெடிய விண்வெளிப் பயணத்தின் முதல் அடியை இன்று எடுத்து வைக்கவிருக்கிறது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்X நிறுவனம். உலகின் பெரிய மற்றும் சக்திவாய்ந்த ஸ்டார்ஷிப் (Starship) ராக்கெட்டை இன்று மாலை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருக்கிறது ஸ்பேஸ்X.
அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையை விட உயரமாக இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டை முழுமையாக மறுபயன்பாட்டிற்கு பயன்படுத்துவம் வகையில் உருவாக்க முயற்சி செய்து வருகிறது ஸ்பேஸ்X நிறுவனம்.
இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு விண்ணில் செலுத்தவிருக்கும் இந்த ராக்கெட்டை வைத்து தான், சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை கொண்டு செல்லவும் திட்டமிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.
குறைந்தபட்சம் மூன்று முறையாவது இந்த வகை ராக்கெட்டை மறுபயன்பாடு செய்யத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
விண்வெளி
உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்:
இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டால், விண்வெளியில் செலுத்தப்பட்ட உலகின் சக்திவாய்ந்த ராக்கெட் என்ற பெயரைப் பெறும். நாசாவின் ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டத்தை விட இரண்டு மடங்கு சக்திவாய்ந்ததாக இதனை உருவாக்கியிருக்கிறது ஸ்பேஸ்X.
இந்த ராக்கெட்டானது வடிவமைக்கப்பட்ட பிறகு முதல்முறையாக தற்போது தான் விண்ணில் ஏவப்படவிருக்கிறது.
முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுமா அல்லது முதல் அடி தோல்வியில் முடியுமா என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த முயற்சியில் இருந்து இந்த ராக்கெட் குறித்த பல தகவல்களை, தரவுகளை நாங்கள் தெரிந்து கொள்வோம், எனத் தெரிவித்திருக்கிறார் ஸ்பேஸ்X நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்.
2025-ல் நாசாவின் ஆர்டிமிஸ்-3 திட்டத்தில் இந்த ராக்கெட் மூலமாகவே மனிதர்களை மீண்டும் நிலவுக்குக் கூட்டிச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.