ராக்கெட் மறுபயன்பாட்டில் புதிய சாதனை படைத்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ்
ராக்கெட் மறுபயன்பாட்டில் புதிய சாதனை படைத்திருக்கிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடைய ஃபால்கன் 9 ராக்கெட். விண்வெளி தளவாடங்களை மறுபயன்பாடு செய்வதில் முன்பிருந்த அதிக ஆர்வம் காட்டி வருகிறார் எலான் மஸ்க். விண்வெளி தளவாடங்களை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தும் போது தொடர்ச்சியான விண்வெளி திட்டங்களுக்கான செலவு குறையும் என்பது அவரது வாதம். இந்நிலையில், குறிப்பிட்ட ஃபால்கன் 9 ராக்கெட்டானது 18வது முறையாக விண்வெளித் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கனாவரல் விண்வெளி மையத்திலிருந்து 23 ஸ்டார்லிங்க் செயற்கைகோள்கைத் தொங்கி இந்திய நேரப்படி இன்று அதிகாலை விண்ணில் பாய்ந்திருக்கிறது இந்த ஃபால்கன் 9 ராக்கெட்.
மீண்டு வந்த முதல் நிலை:
விண்ணில் செலுத்தப்பட்ட 8.5 நிமிடங்களில் அந்த ஃபால்கன் 9 ராக்கெட்டின் முதல் நிலையானது மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அந்த ராக்கெட்டின் மேல்நிலையானது ஸ்டார்லிங்க் செயற்கைகோள்களை பூமியின் குறைந்த உயர சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தியிருக்கிறது. இந்த 23 செயற்கைகோள்களுடன் தற்போது ஒட்டுமொத்தமாக 5,000 செயற்கைகோள்களைக் கொண்ட மாபெரும் செயற்கைகோள் இணையக் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது ஸ்டார்லிங்க். முன்னதாக 12 ஸ்டார்லிங்க் திட்டங்களை நிறைவேற்றியிருக்கும் இந்த ஃபால்கன் 9 ராக்கெட்டிற்கு இது 13வது ஸ்டார்லிங்க் திட்டமாகும். ஸ்டார்லிங்கை தவிர்த்து, க்ரூ டெமோ-2, ANASIS-11, CRS-21, டிரான்ஸ்போர்டர்-1 மற்றும் டிரான்ஸ்போர்டர்-3 உள்ளிட்ட விண்வெளித் திட்டங்களுக்கு இந்தக் குறிப்பிட்ட ஃபால்கன் 9 ராக்கெட்டின் முதல்நிலையைப் பயன்படுத்தியிருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ்.