எக்ஸ் தளத்தில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்
செய்தி முன்னோட்டம்
எக்ஸாக மாறிய ட்விட்டர் தளத்தில் பத்திரிகையாளர்கள் நேரடியாகப் பதிவிடுவதை ஊக்குவிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார் எலான் மஸ்க். அதற்குத் தேவையான வசதிகளையும் எக்ஸில் உருவாக்கவும் முயற்சி செய்து வருகிறார் அவர்.
அவருடைய முயற்சியைப் பறைசாற்றும் வகையில், தற்போது சமூக வலைத்தளமாக மட்டுமில்லாமல், யூடியூபைப் போல தங்கள் தளத்திலேயே தொடர்ந்து செயல்படுபவர்களுக்கான வருவாய் ஈட்டும் தளமாகவும் மாறியிருக்கிறது எக்ஸ்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எக்ஸில் அறிமுகப்படுத்தப்படலாம் எனக் கூறப்பட்ட ஒரு மாற்றமானது தற்போது செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது.
அதன்படி இனி எக்ஸ் தளத்தில் பகிரப்படும் செய்திப் பகிர்வுகள் மற்றும் வலைத்தளப் பகிர்வுகளில் தலைப்பு இல்லாமல் டொமைன் பெயர் மட்டும் புகைப்படத்துடன் இடம்பெறவிருக்கிறது.
எக்ஸ்
எதற்காக இந்தப் புதிய மாற்றம்?
செய்திப் பகிர்வுகளில் தலைப்புகளை நீக்குவதன் மூலம், ஸ்மார்ட்போன் எக்ஸ் செயலிகளில் கூடுதலான பதிவுகளை திரையில் காட்ட முடியும் என்பது தான் அடிப்படைத் திட்டம்.
ஆனால், தலைப்புகளை நீக்குவதன் மூலம் செய்தி நிறுவனங்களின் 'கிளிக் பெய்ட்' முறையை பயனர்கள் தவிர்க்கவும் உதவ முடியும் என இந்தப் புதிய மாற்றம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் தெரிவித்திருந்தார் எலான் மஸ்க்.
குறிப்பிட்ட பகிர்வுடன் தாமாகத் தோன்றும் தலைப்புகள் மட்டுமே நீக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்தப் பகிர்வில் குறிப்பிட்ட பயனாளர்கள் தங்களுக்கு விரும்பு வகையில் குறிப்புகளை இட்டுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஐஓஎஸ் எக்ஸ் செயலியில் மட்டும் இந்த மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், எக்ஸ் வலைத்தளத்திலும் இந்த மாற்றத்தை தற்போது பயனர்களால் பார்க்க முடிகிறது.