
செயற்கை மழைப்பொழிவை திட்டமிடும் டெல்லி அரசு; எப்படி சாத்தியம்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, டெல்லியின் சில இடங்களில் காற்றின் தரம் 530 என்ற மிக மோசமான அளவை எட்டியிருப்பதோடு, உலகிலேயே மிகவும் மாசடைந்த நகரமாகவும் மாறியிருக்கிறது டெல்லி.
300-க்கும் மேற்பட்ட அளவிலான காற்று மாசைக் கொண்டிருப்பது ஒருவரது உடலில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். டெல்லியில் தற்போதைய மாசடைந்த காற்ற சுவாசிப்பது என்பது ஒருவர் 10 முறை புகைப்பிடிப்பதற்கு சமமாகும்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில், அறுவடைக்கு பின்பான விளை மிச்சங்களை எரித்தது மற்றும் தீபாவளிப் பண்டிகையையொட்டி அதிகளவிலான பட்டாசுகளை வெடித்தது உள்ளிட்டவை, டெல்லியின் காற்று மாசு அதிகரித்ததற்கான காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன.
டெல்லி
காற்று மாசுவைக் குறைக்க டெல்லி அரசின் திட்டம்:
காற்று மாசுவைக் குறைக்க பல்வேறு திட்டங்களை ஏற்கனவேை அமல்படுத்தியிருக்கிறது டெல்லி அரசு. ஒற்றைப்படை/இரட்டைப்படை வாகன பயன்பாட்டு முறை, எலெக்ட்ரிக் வாகன விற்பனை ஊக்குவிப்பு, பொதுப் போக்குவரத்து ஊக்குவிப்பு எனப் பல்வேறு திட்டங்கள் தற்போது அமலில் இருக்கின்றன.
தற்போது சட்டென அதிகரித்திருக்கும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த செயற்கை மழையை பொழியவைக்கும் முயற்சியை செயல்படுத்த ஆலோசனை செய்து வருகிறது டெல்லி அரசு.
அடிப்படையில் காற்றில் நுண்துகள்கள் அதிகளவில் கலந்திருப்பதையே காற்று மாசு எனக் குறிப்பிடுகிறோம். அப்படியெனில், மழை பெய்யும் போது, மேகத்திலிருந்து விழும் மழைத்துளியானது தரையில் விழும் முன்னர் காற்றில் உள்ள நுண்துகள்களை தன்னோடு ஈர்த்துக் கொள்ளும். எனவே, தொடர்ந்து அதிக நேரத்திற்கு மழை பெய்யும் போது காற்று மாசுபாடு ஓரளவு குறையும்.
மழை
செயற்கை மழைப்பொழிவு:
காற்று மாசுபாட்டைக் குறைக்க 'மேக விதைப்பு' (Cloud Seeding) முறையின் மூலம் செயற்கை மழயைப் பொழிய வைக்கத் திட்டமிட்டு வருகிறது டெல்லி அரசு.
இந்த மேக விதைப்பு முறையில், மேகங்களில் தேங்கியிருக்கும் நீரை செயற்கையான முறையில் மழையாகப் பொழிய வைக்க முடியும். ஆனால், அதற்கு காற்றில் ஈரப்பதமும், மழைப் பொழிவை சாத்தியப்படுத்தும் அளவிற்கான நீரை மேகமும் கொண்டிருக்க வேண்டும்.
இயற்கையாக மழைப் பொழிவிற்குத் தேவையான சாத்தயக்கூறுகள் இருக்கும் நிலையில், செயற்கை அந்த செயல்பாட்டை நாம் ஊக்குவிக்க முடியும், அவ்வளவு தான்.
மேக விதைப்பு முறையில் செயற்கை மழைப் பொழிவை சோதனை செய்து, கடந்த ஜூன் மாதம் வெற்றியும் பெற்றிருக்கிறது இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான ஐஐடி கான்பூர்.
ஐஐடி கான்பூர்
ஐஐடி கான்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் கைகோர்க்கும் டெல்லி அரசு:
கடந்த செப்டம்பர் 12ம் தேதியன்று, ஐஐடி கான்பூரைச் சேர்ந்த ஆராயச்சியாளர்களுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருக்கிறார் டெல்லியில் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய்.
அவரிடம் மேக விதைப்பு முறை குறித்து ஐஐடி கான்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விளக்கமளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், வரும் நவம்பர் 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் செயற்கை மழைப் பொழிவைச் சாத்தியப்படுத்துவதற்கா இயற்கை காரணிகள் அமைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
எனவே, அந்த சமையத்தில் செயற்கை மழையைப் பொழிய வைக்க தேவையான அனுமதிகளை மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து பெறும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. அனுமதிகள் கிடைக்கும் பட்சத்தில், இந்த மாதவே அத்திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
காற்று மாசு
மேக விதைப்பு முறை:
மேக விதைப்பு முறையின் கீழ், மழை நீரைக் கொண்டிருக்கும் மேகங்களில் சில்வர் ஐயோடைடு, பொட்டாசியம் அயோடைடு மற்றும் உலர் பணி ஆகியவற்றை தூவுவார்கள்.
இதன் விளைவாக, மேகங்களில் நிறைந்திருக்கும் மழை நீரானது பனியாக மாறும். இந்தப் பனியின் கணத்தை மேகங்களால் தாங்க முடியாமல், அவை பூமியை நோக்கி விழத் தொடங்கும்.
அப்படி விழும் பனியானது, விழும் போதே உருகி மழைத்துளியாக மாறி நமக்கு மழையாகப் பொழியும். இந்த முறையிலேயே அறிவியலின் துணையுடன் செயற்கை மழை பொழிய வைக்கப்படுகிறது.
ஆனால், இப்படி செயற்கை மழைப் பொழிவு முறைகளைப் பயன்படுத்துவதில் நன்மைகளுடன் பல்வேறு தீமைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.