க்ளோடு AI மூலம் உயிரி ஆயுதங்கள், ஆளில்லா ட்ரோன் தயாரிப்பு? ஆந்த்ரோபிக் நிறுவனம் தடுத்து நிறுத்திய அதிர்ச்சி பின்னணி
செய்தி முன்னோட்டம்
பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக், தங்களது க்ளோடு AI மாடல்களை சில நாடுகளும், அரசு ஆதரவு பெற்ற சைபர் கும்பல்களும் சட்டவிரோதமாக பயன்படுத்த முயன்றதாக தனது அண்மைக்கால பாதுகாப்பு அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளது. டிசம்பர் 2025 முதல் ஆகஸ்ட் 2026 வரை முடக்கப்பட்ட இந்த தாக்குதல்களில், உயிரி ஆயுதங்கள் வடிவமைப்பு, மக்கள் கண்காணிப்பு, ராணுவ ஆயுத மென்பொருள் தயாரிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்பாடு
முக்கிய தவறான பயன்பாடுகள் மற்றும் கண்டறிதல்கள்
சிகிங்குனியா மற்றும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்களை மேலும் ஆபத்தானதாக மாற்றும் மரபணு ஆராய்ச்சிகளுக்கும், ராணுவ ஆராய்ச்சி நிறுவனங்களுக்காக நிதி உதவி விண்ணப்பங்களைத் தயார் செய்யவும் க்ளோடு AI பயன்படுத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனங்களுக்கான மென்பொருளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது.
உக்ரைன் போர் களக் காட்சிகளைப் பயன்படுத்தி, மனிதர்களின் தலையீடு இன்றி இயங்கும் தானியங்கி 'காமிகேஸ்' ட்ரோன்களை உருவாக்க முயன்றனர்.
தாய்வானின் 12 முக்கிய ராணுவ இலக்குகளைத் தாக்கும் வான் பாதுகாப்பு மற்றும் மின்னணு போர் முறைகளுக்கான உருவகப்படுத்துதலுக்கு பயன்படுத்தப்பட்டது.
மக்கள் கண்காணிப்பு
மக்கள் கண்காணிப்பு மற்றும் மாதிரி திருட்டு
சீனாவை சேர்ந்த கும்பல்கள் சிரியாவில் உள்ள உய்கூர் மக்களையும், திபெத்திய பௌத்தர்களையும் கண்காணிக்க க்ளோடு AI-ஐ பயன்படுத்தின.
ஈரானில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களை கண்காணிக்க இது தவறாக பயன்படுத்தப்பட்டது.
அலிபாபா, டீப்சீக், மூன்ஷாட் AI போன்ற முன்னணி சீன நிறுவனங்கள், க்ளோடு AI-ன் பதில்களை திருடி தங்களின் சொந்த மாடல்களுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தியதாக ஆந்த்ரோபிக் குற்றம் சாட்டியுள்ளது.
கூடுதலாக, போலி டேட்டிங் செயலிகள் மூலம் லட்சக்கணக்கான உரையாடல்களை உருவாக்கி பயனர்களை ஏமாற்றிய சீனா அடிப்படையிலான நெட்வொர்க்கையும் ஆந்த்ரோபிக் முடக்கியுள்ளது.
இத்தகைய தவறான பயன்பாடுகளைத் தடுக்க கணக்குகளைத் தடை செய்தல், மாடல்களின் பாதுகாப்பு அமைப்புகளைப் பலப்படுத்துதல் மற்றும் அரசு பாதுகாப்பு முகமைகளுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்ற தீவிர நடவடிக்கைகளை ஆந்த்ரோபிக் மேற்கொண்டு வருகிறது.