டீப்ஃபேக் மோசடிகளுக்கு எதிராக ஆதார் மூலம் தீர்வு; இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி ஆலோசனை
செய்தி முன்னோட்டம்
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மற்றும் தலைவரான நந்தன் நிலேகனி, அதிகரித்து வரும் டீப்ஃபேக் மோசடிகளுக்கு எதிராக ஆதாரை ஒரு சாத்தியமான தீர்வாக முன்மொழிந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் பேசியபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
டிஜிட்டல் அரெஸ்ட் எனப்படும் மோசடியால் இந்தியா தனித்துவமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று நிலேகனி குறிப்பிட்டார்.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளால் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டதாக நினைத்து ஏமாற்றப்படுகிறார்கள்.
அங்கீகார தீர்வு
அடையாளத்தைச் சரிபார்ப்பதில் ஆதாரின் பங்கு
ஒரு நபரின் அடையாளத்தைச் சரிபார்க்கவும் அவர்களின் இருப்பைச் சரிபார்க்கவும் ஆதாரைப் பயன்படுத்தலாம் என்று நிலேகனி பரிந்துரைத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒருவிதத்தில் ஆதார் பிரச்சினையைத் தீர்க்கிறது. ஒருவர் உண்மையான நபர் என்பதைக் காட்ட விரும்பினால், நீங்கள் அவரை ஆதார் மூலம் அங்கீகரிக்கலாம்." என்று அவர் கூறினார்.
இது லைவ்னெஸ் சோதனைகள் மூலம் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக செயற்கை நுண்ணறிவைப் (ஏஐ) பயன்படுத்தி செய்யப்படும். இது டீப்ஃபேக் மோசடிகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கக்கூடும்.
DPDP சட்டம்
தரவு பாதுகாப்பு மற்றும் ஏஐ பயன்பாடு குறித்து கருத்து
அதிக அளவிலான தரவைப் பயன்படுத்தும் ஏஐ மாதிரிகள் தொடர்பான கவலைகள் குறித்தும் நிலேகனி குறிப்பிட்டார்.
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP) சட்டம் அத்தகைய பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான வலுவான கட்டமைப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார்.
"மக்கள் தங்கள் தரவு பயன்படுத்தப்படுகிறதா என்று சரியாகக் கவலைப்படுவார்கள். இதற்காக நம்மிடம் மிகச் சிறந்த DPDP சட்டம் உள்ளது.
அது ஏஐ பயன்பாட்டையும் நிர்வகிக்கும் என்று நான் நினைக்கிறேன்." என்று அவர் விவாதத்தின் போது கூறினார்.