உலக சிங்க தினம் 2024: அழிவின் விளிம்பில் உள்ள காட்டு ராஜாக்களை மீட்பதற்கான முன்னெடுப்பு
உலக சிங்க தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிங்கங்களை பாதுகாப்பதும், அதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த தினத்தின் நோக்கமாகும். உலக சிங்க தினம் மனித அச்சுறுத்தலுக்கு உள்ளான இனங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிக்க ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது. காடுகள் அழிப்பால் வசிப்பிட இழப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் போன்ற காரணங்களால், சிங்கங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, விரைவில் அழிந்து வரும் உயிரினங்களின் நிலையை நெருங்குகிறது. தற்போது உலக அளவில் சிங்கங்களின் எண்ணிக்கை 30,000 முதல் 1,00,000 வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கங்கள் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்
காட்டின் ராஜா என போற்றப்படும் சிங்கங்கள் சக்தி வாய்ந்தவை. ஆனால் அவை மிகப்பெரிய சோம்பேறிகளாக அறியப்படுகின்றன. அவை ஒருநாளைக்கு 20 மணிநேரம் தூங்குவதாக கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாக எப்போதும் குழுவாக வாழும் சிங்கங்களின் ஒவ்வொரு குழுக்களிலும் பொதுவாக 10 முதல் 15 விலங்குகள் வரை இருக்கும். ஒரு பாலூட்டும் பெண் சிங்கம், தனது குழுவில் உள்ள இதர குட்டிகளுக்கும் பாலூட்டும் தன்மை கொண்டவையாக உள்ளன. ஆண் சிங்கங்களின் ரோமங்கள் 16செ.மீ நீளம் வளரக்கூடியது. இது துணையை ஈர்ப்பதற்கும், எதிரியை பயமுறுத்துவதற்கும் பயன்படுகிறது. ஒரு குழுவில் உள்ள அனைத்து சிங்கங்களும் பொதுவாக ஒன்று சேர்ந்து கர்ஜிக்கின்றன. கர்ஜனை பொதுவாக சுமார் 40 வினாடிகள் நீடிக்கும். மேலும், அவை 5கிலோமீட்டர் தூரம் வரைகூட கேட்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை
சிங்கங்கள் பொதுவாக ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்பட்டாலும், இந்தியாவின் குஜராத்தில் உள்ள கிர் காடுகளில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வசிக்கின்றன. குஜராத்தின் கிர் தேசிய பூங்கா மற்றும் சௌராஷ்டிரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகியவற்றில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை சீராக வளர்ந்து வருகிறது. 2015 மற்றும் 2020 க்கு இடையில் சிங்கங்களின் எண்ணிக்கை 523இல் இருந்து 674 ஆக அதிகரித்தது. கிர் தேசியப் பூங்காவின் பாதுகாப்பு முயற்சிகள் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையை நிலைப்படுத்தவும், சிறிதளவு அதிகரிக்கவும் முக்கியப் பங்காற்றியுள்ளன. ஆசிய சிங்கங்களின் ஒரே வசிப்பிடமாக உள்ள இந்தியாவில் சிங்கங்களை பாதுகாக்க தொடர் முயற்சிகளை எடுத்து வரும் அரசுகள், கடைசியாக புராஜக்ட் சிங்கம் என்ற பெயரில் சிங்கங்களின் வாழ்விடத்தை மேம்படுத்தி அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.