பொங்கல் 2024: தை-1 பொங்கல் வைக்க உகந்த நேரம்
தென்னிந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல். குறிப்பாக தமிழ்நாட்டில், அறுவடை காலத்தை குறிக்கும் தை மாதத்தின் துவக்கத்தை பொங்கல் பண்டிகையாக கொண்டாடுவது மரபு. மத பேதமின்றி, இந்த பண்டிகை அனைவருக்குமான விழாவாக பட்டிதொட்டிகளில் எல்லாம் மக்கள் உற்சாகமாக கொண்டாடுவர். இந்தாண்டு, தை முதல் நாள், ஜனவரி 15 ஆம் தேதி பிறக்கிறது. அதனால், பொங்கல் விழா ஜனவரி 14, போகி பண்டிகையுடன் துவங்கி, ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கலுடன் முடிவடைகிறது. பொங்கல் பண்டிகை செழிப்பின் அடையாளமாக, ஆண்டு முழுவதும் நாட்டில் விவசாயம் செழிக்க உதவிய இயற்கைக்கு நன்றி செழுத்தும் விதமாகவே கொண்டாடப்படுகிறது.
பொங்கல் வைக்க உகந்த நேரம்
பொங்கல் நாளில், விவசாயத்திற்கு உதவிய இயற்கைக்கும், முதல் அறுவடையில் கிடைத்த பொருட்களையும் வைத்து - அரிசி, நெய், வெள்ளம், மஞ்சள், கரும்பு போன்றவற்றை வைத்து, விவசாயத்திற்கு முக்கிய காரணமாக இருந்த சூரியனுக்கு இந்த புது பொருட்களை வைத்து பொங்கல் செய்வதும் மரபு. பொதுவாக வீட்டின் முன்புறம், சூரிய உதயத்தின்போது, கோலமிட்டு, புதுப்பானையில் அரிசி, பால், நெய், வெள்ளம் சேர்த்து பொங்கல் செய்து, அதை இறைவனுக்கு படைப்பதே வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் வைக்க நல்ல நேரம், காலை 6.30- 7.30 வரை வைக்கலாம். அல்லது, 9.30 மணி-10.30 மணி வரை வைக்கலாம். இடைப்பட்ட நேரமான 7.30 மணி-9.30 மணி வரை ராகுகாலம் என்பதால், அந்த நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.