இந்திய உணவு மரபுகளும், வேர்களும்: ஒரு பார்வை
உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், அவற்றிற்குரிய கலாச்சாரங்களும், மரபுகளும் உண்டு. அவை காலப்போக்கில் மாறினாலும், அவற்றிற்கான தனித்துவம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இந்தியா, உலகின் பண்டைய நாடுகளில் ஒன்று. இங்கிருக்கும் நாகரிகமும், மரபுகளும், மொழிகளும் மிகவும் பழமை வாய்ந்தது. எத்தனை படையெடுப்புகள் வந்தாலும், இந்தியா அதன் ஒரு சில மரபுகளை இன்றளவும் கடைபிடித்து வருகிறது. விருந்தாளிகளை கை கூப்பி வணங்குவது, குடும்பத்தின் வேர்களை மதிப்பது, கைகளால் உண்பது போன்ற பல பழக்கங்கள் நமக்குள்ளேயே ஊறி விட்டது. மரபுகளை தாண்டி, இதில் பல மருத்துவ குணங்களும், அறிவியல் ரீதியான நன்மைகளும் அடங்கி உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன. அப்படி, இந்திய உணவு சார்ந்த மரபுகள் என்ன என்பதை பற்றி ஒரு சிறு பார்வை இதோ:
கைகளால் உண்பது
ஆயுர்வேதத்தில், கைகளால் உணவினை உண்பது என்பதுதான் அடிப்படையாக கருதப்படுகிறது. இந்திய உணவுகளை கைகளால் உண்பதால், அதன் உண்மையான சுவையை உணர முடியும் என நம்பப்படுகிறது. ஆயுர்வேத நூல்களின் படி, ஐந்து விரல்களும், உடலின் முக்கிய உறுப்புகளின் நீட்சியாக கருதப்படுகிறது. கைகளால் உண்பதால், இந்த உறுப்புக்கள் தூண்டப்பட்டு, செரிமானம் அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, இந்து நூல்களின்படி, கைகளால் உண்பதால், வயிறு மட்டுமல்லாமல், மனதும் நிறைவதாக ஒரு ஐதீகம்.
கடவுளை வணங்குதல்/ படைத்தல்
விசேஷ நாட்களில், செய்யப்படும் உணவினை முதலில் கடவுளுக்கு படைத்துவிட்டு, பின்னர் உண்பது இந்துக்களின் வழக்கம். அதே நேரம், கடவுளுக்கு படைக்கும் உணவினை, தயாரிக்கும் போது ருசிப்பதற்கும் தடை உண்டு. அதாவது, சமைக்கும் உணவை பக்தியுடன், கவனமாக சமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதேபோல, நமக்கு கிடைக்கும் ஒரு கவளம் சோறும் அது இறைவனின் அருளால் கிடைத்தது என்பதை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கம் பின்படுத்தப்படுகிறது. கிறிஸ்தவ சமூகத்திலும், ஒவ்வொரு உணவிற்கும் முன்னரும், இறைவனிடம் நன்றி தெரிவிக்கும் வழக்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழை இலையில் சாப்பிடுவது
சூடாக பரிமாறப்படும் உணவு, வாழை இலையில் படும் போது, அதில் ஒருவித ரசாயனம் வெளியாகும் எனவும், அது உங்களின் செரிமானத்திற்கு உதவும் எனவும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, வாழை இலை எளிதாக மக்கக்கூடிய பொருள். அதனால் பூமிக்கும் பயன் உண்டு என்பதால், வாழை இலை உணவு, நம் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல, வாழை இலையில் உணவு பரிமாறுவதற்கு ஒரு நேர்த்தி உண்டு. முதலில் இனிப்புடன் துவங்குவார்கள். இறுதியாக பாயசம் அல்லது பழம் அளித்து நிறைவு செய்வார்கள். அதேபோல, வாழை இலையை மேலிருந்து கீழ் மூடவேண்டும். அதாவது, உங்களை நோக்கி மூட வேண்டும். அதனால், எதிரில் அமர்ந்திருப்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்படக்கூடாது என்பதால் இந்த வழக்கம்
உணவை பகிர்தல், உணவை வீணாக்க கூடாது
'பகிர்ந்தளித்து உண்' என்பது மூதாதையர்களின் வாக்கு. இருப்பதை பகிர்ந்து உண்ண வேண்டும் என்பது பொருள். விசேஷ நாட்களிலோ அல்லது விருந்து உபச்சாரங்களிலோ, நமக்கு அளிக்கப்படும் உணவினை அனைவருடனும் பகிர்ந்து உண்ண வேண்டும் என இந்திய கலாச்சாரத்தில் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அது இன்று வரை தொடர்கிறது. நண்பர்களுடன் வெளியில் செல்லும்போது, ஆர்டர் செய்யும் உணவு வகைகளை அனைவரும் ஷேர் செய்து உண்பது நமது அன்றாட வழக்கமாகி விட்டது. அதேபோல, உணவை வீணாக்க கூடாது என்பதும் இந்திய மரபுகளில் ஒன்று. இந்த பழக்கம் சிறு வயது முதல் கற்பிக்கப்படுகிறது. இதனால் பொருள் வீணாவது மட்டுமின்றி, அதை சமைப்பவரின் உழைப்பை அங்கீகரிப்பது கற்பிக்கப்படுகிறது.