உலக உணவு தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவங்கள் என்ன ?
உலகம் முழுவதும் இன்று(அக்.,16) உலக உணவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1945ல் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவாசாய அமைப்பானது நிறுவப்பட்டது. அதன் பின்னர் 1979ல் FAO மாநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று தெரிகிறது. 150க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தினத்தினை கொண்டாட அங்கீகாரம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. உலக மக்களின் பசியினை போக்கி அவர்களுக்கு உணவு கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதன் நோக்கமாகவே ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
சத்தான உணவை பெறுவது ஒவ்வொரு மனிதனுக்கான உரிமை
உணவுகளை ருசிக்காக சாப்பிடுவோர் மத்தியில், ஒருவழி உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் மக்களும் இதே சமூகத்தில் தான் வாழ்ந்து வருகிறார்கள். பட்டினி என்றவுடன் ஆப்பரிக்கா நாட்டினை தேடி செல்லவேண்டியதில்லை. நம் அருகிலேயே பலர் உணவு, ஊட்டச்சத்துக்கள் இன்றி பட்டினியில் வாடி தவிக்கிறார்கள். இதற்கு சான்றாக, 125 நாடுகளை உள்ளடக்கிய பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது என்பது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசியமான ஆரோக்கியமான உணவுகளை பெறுவது என்பது இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. எனவே அதனை கிடைக்க பெறுவது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்த உலக உணவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அவசர உலகில் மாறிய உணவு வகைகளால் ஏற்படும் நோய்கள்
தற்போதைய அவசர உலகில் ருசியான உணவினை தான் பெரும்பாலானோர் தேடி செல்லும் நிலையில், சத்தான உணவுகள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்னும் அவல நிலையும் நிலவுகிறது. இது பல நோய்களுக்கு வித்திடுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டால் 20 கோடி மக்கள் பாதிப்படைந்துள்ளார்கள் என்று உலக வேளாண் மற்றும் உணவு நிறுவனம் தெரிவிக்கிறது. நமது பாரம்பரிய உணவு முறைகள் மாற்றமடைந்ததே இதற்கு காரணமாகும். எனவே, குழந்தைகள் மற்றும் இளையத் தலைமுறையினருக்கு சிறுதானிய உணவு வகைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகள் மற்றும் நமது பாரம்பரிய உணவு வகைகளை மீண்டும் வழக்கத்தில் கொண்டுவருவதுடன், அதற்கான விழிப்புணர்வினை கொண்டு வரும் அவசியத்தில் நாம் உள்ளோம். அதற்கான நாளாக இந்த நாள் பார்க்கப்படுகிறது.
உணவினை வீணடிக்காத பழக்கத்தை வழக்கத்தில் கொண்டுவர வேண்டும்
மேலும் உணவு தட்டுப்பாடு பலருக்கு இருக்கும் நிலையில், வேண்டிய உணவுகள் கிடைக்கபெறுவோர் அதனை வீணடிக்காமல் இருக்கும் வழக்கத்தையும் நடைமுறையில் கொண்டு வருவது அவசியம். அதற்கான உணவின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து சிறியவர் முதல் பெரியோர் வரை எடுத்துரைக்க வேண்டும். தற்போதைய சூழலில் திருமணம், பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் உணவுகள் மீதமடையும் பட்சத்தில், அதனை வீணடிக்காமல் உணவின்றி தவிப்போருக்கு அளிப்பதில் நாம் உறுதியேற்க வேண்டும். அதேபோல் நமது நாட்டில் அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளை எடுத்து கொள்வதன் மூலம் ஒரு மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்துவிடும் என்பது குறிப்பிடவேண்டியவை.
உணவு இன்றி தவிப்போருக்கு உதவ முன்வாருங்கள்
இன்றைய தினத்தினை நாம் அருகிலுள்ள உணவு இல்லாமல் தவிப்போருக்கு நம்மால் இயன்றதை அளிக்க முன்வர வேண்டும். இந்த அவசர உலகில் உதவ மனம் உள்ளது, ஆனால் நேரமில்லை என்று கூறுவோர் பலர். அப்படிப்பட்டவர்கள் உணவு வழங்கி உதவும் அமைப்புகளுக்கு தங்களால் முடிந்த நிதி போன்ற இதர உதவிகளை செய்யலாம். உணவு பொருட்களில் பல்வேறு கலப்படங்கள் செய்யப்படும் நிலையில், நமக்கு தேவையான காய்கறிகள், பழங்களை நாமே விளைச்சல் செய்து உண்பது என்பதே பாதுகாப்பானது என்னும் நிலை தான் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.