நீங்கள் பயன்படுத்தும் மஞ்சள் உண்மையில் சுத்தமானதா? கலப்படம் செய்யப்பட்டுள்ளதா?
செய்தி முன்னோட்டம்
உங்கள் வீட்டில் தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் மஞ்சள்.
இது உணவின் சுவை மற்றும் நிறத்திற்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தப்படுவது. உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினசரி மஞ்சளை உணவில் சேர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதோடு, ஆயுர்வேத மருத்துவத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால், தற்போது சந்தையில் விற்கப்படும் மஞ்சளில் அதிகமாக கலப்படம் செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன.
விற்பனையில் லாபம் பார்ப்பதற்காக, மஞ்சளின் நிறத்தை செயற்கையாக மேம்படுத்தி விற்பனை செய்வதாக புகார்கள் எழுகின்றன.
மஞ்சள் தூளில் செயற்கை நிறமிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன எனவும் உணவு பாதுகாப்பு துறையினர் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்.
இந்நிலையில், கலப்படம் செய்யப்பட்ட மஞ்சளைக் கண்டறிவது எப்படி?
சோதனை
மஞ்சளின் சுத்தத்தை கண்டறியும் சோதனை
மஞ்சளில் நிறத்தை மேம்படுத்த, மெட்டானில், லெட் குரோமேட், சுண்ணாம்பு தூள் மற்றும் காட்டு மஞ்சள் போன்ற பொருட்கள் கலக்கப்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவது எளிது.
சிறிது மஞ்சளை உங்கள் உள்ளங்கையில் வைத்து 10-20 நொடிகள் தேய்த்து, பின்னர் கழுவுங்கள். லேசான மஞ்சள் கறை இருந்தால், அது தூய மஞ்சள்.
அதேபோல ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
மஞ்சள் தூள் அனைத்தும் கீழே தங்கினால், அது நல்லது. ஆனால், கீழே படியவில்லை என்றால், அது கலப்படமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
மஞ்சள் கலக்கப்பட்ட தண்ணீர் வெளிர் மஞ்சள் நிறமாக இருந்தால், அது தூய்மையானது. கலப்படம் செய்யப்பட்டிருந்தால், அது அடர்த்தியான மஞ்சளாக இருக்கும்.