Page Loader
இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்காக பாரிசில் வெளியிலிருந்து வழங்கப்பட்ட உணவுகள்; எதனால் தெரியுமா?
பாரிஸ் இந்திய உணவகங்கள்

இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்காக பாரிசில் வெளியிலிருந்து வழங்கப்பட்ட உணவுகள்; எதனால் தெரியுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 05, 2024
06:31 pm

செய்தி முன்னோட்டம்

பாரிஸ் ஒலிம்பிக் வளாகத்தில் உள்ள பல வீரர்கள் அங்கு வழங்கப்படும் உணவு குறித்து அதிருப்தி தெரிவித்த நிலையில், இந்திய விளையாட்டு வீரர்களுக்கு அங்குள்ள இந்திய உணவகங்களில் இருந்து உணவு வழங்கப்படுவதாக பிடிஐ தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் பிற துப்பாக்கி சுடுதல் வீரர்கள் உட்பட இந்திய வீரர்களுக்கு, பிரான்சின் சாட்யூரோக்ஸில் உள்ள தாஜ்மஹால் மற்றும் லு பாம்பே போன்ற உணவகங்களில் உணவு வழங்கப்படுகிறது. தாஜ்மஹால் உணவகத்தின் இணை உரிமையாளரான அதிஃப் நோமன் இதுகுறித்து கூறுகையில், மனு பாக்கர் பதக்கம் வென்றதை பார்த்த பிறகுதான் அவருக்கு தான் உணவு வழங்கியது நினைவிற்கு வந்ததாகவும், அவர் பலமுறை அங்கு வந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறப்பு உணவு

இந்திய வீரர்களுக்காக சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட உணவு

பாகிஸ்தானைச் சேர்ந்த நோமன், பாரிசில் உள்ள தாஜ்மஹால் உணவகத்தின் இணை உரிமையாளர்களில் ஒருவராக உள்ளார். அங்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பொதுவாக மட்டர் பனீர், தால் மக்கானி, பாலக் பனீர், அனைத்து நடுத்தர காரமான மற்றும் ப்ளைன் நான் ஆகியவற்றை வழக்கமாக எடுத்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார். தாஜ்மஹால் உணவகத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில், 38 ஆண்டுகளாக இந்திய உணவு வகைகளை வழங்கும் லு பாம்பே உணவகம் உள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அதன் உணவக மேலாளர் முகமது ஹம்சா, "இந்திய வீரர்களுக்காக மசாலா இல்லாமல் உணவு தயாரிக்கப்பட்டது. துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் பெரும்பாலும் பருப்பு, ரொட்டி அல்லது காய்கறிகள் போன்ற சைவ உணவுகளை மசாலா இல்லாமல் சாப்பிடுகிறார்கள்." என்று கூறினார்.