இராஜ உணவான காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?
தற்போது அநேக உணவகங்களில் வடஇந்திய உணவு வகைகளே பிரதானமாக விரும்பி சாப்பிடும் உணவாக மாறிவிட்டது. அதிலும் இளசுகளுக்கு, குட்டிஸ்களுக்கும் தென்னிந்திய உணவுகளான தோசை, இட்லி போன்றவற்றை தினமும் சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். அதனால், எப்போதுமே அவர்களின் விருப்ப தேர்வு வடஇந்திய உணவுகளும், சைனீஸ் உணவுகளும் தான். அதில், வடஇந்தியா உணவுகளில், ராஜாக்களின் உணவாக கருதப்படுவது, பிரியாணிகளும், புலாவ்களும் தான். பிரியாணி செய்முறை பற்றி ஏற்கனவே நாம் பார்த்துவிட்டோம். அதனால், இன்று, காஷ்மீர் புலாவ் செய்வது எப்படி என பாப்போம். காஷ்மீர் உணவுகளே பொதுவாக 'ரிச் ஃபூட்' என குறிப்பிடுவதுண்டு. காரணம், அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள், ராஜஅனுபவத்தை தரும் என்பதால். இந்த காஷ்மீரி புலாவ்-உம் அந்த வகையே.
தேவையான பொருட்கள்
1 கப் பாஸ்மதி அரிசி 10 முந்திரி பருப்புகள் 15 பாதாம் 15 திராட்சை 1 வெங்காயம் குங்குமப்பூ சில இழைகள் ½ கப் பால் ¾ கப் மாதுளை தேவைக்கேற்ப உப்பு 2 தேக்கரண்டி நெய் 1 தேக்கரண்டி எண்ணெய் ¼ தேக்கரண்டி சர்க்கரை தாளிக்க 1 தேக்கரண்டி நெய் ½ அங்குல இலவங்கப்பட்டை 1 ஏலக்காய் 1 கிராம்பு 1 பிரிஞ்சி இலை
செய்முறை
அரிசியைக் கழுவி வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். மறுபுறம், குங்குமப்பூவை சிறிது வெதுவெதுப்பான பாலில் ஊறவைக்கவும். ஒரு கடாயில், நெய்யை சூடாக்கி, முந்திரி, பாதம் போன்ற நட்ஸ்களை மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். நட்ஸ்கள் முழுதாகவோ அல்லது உடைந்ததாகவோ சேர்க்கலாம், அது உங்கள் விருப்பம். இப்போது உலர் திராட்சையும் சேர்த்து, பஞ்சு போல் வரும் வரை வதக்கவும். வறுத்த முந்திரி, பாதாம் பருப்பு மற்றும் கிஸ்மிஸ்-ஐ தனியாக எடுத்து வைத்துவிட்டு, அதே கடாயில், எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சர்க்கரையுடன் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். அனலை குறைத்து வைத்து, வெங்காயம் கேரமல் ஆகும் வரை, அவ்வப்போது கிளறி விடவும்.
செய்முறை
வறுத்த வெங்காயத்தை தனியாக எடுத்து வைத்து, அதே கடையில், தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்க்கவும். அதனுடன், பால் + 1 கப் தண்ணீர் சேர்க்கவும். நன்கு வதங்கியதும், ஊறவைத்த அரிசி, ஊறவைத்த குங்குமப்பூ, தேவையான உப்பு சேர்த்து 3-4 நிமிடங்கள், மிதமான தணலில் கொதிக்க வைக்கவும். பெரும்பாலான தண்ணீர் உறிஞ்சப்பட்டு, அரிசி 80-90% வெந்திருக்கும். பின்னர் தீயை முடிந்தவரை குறைவாக வைத்து, 10-14 நிமிடங்கள் மூடி வைக்கவும். அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அரிசி வெந்ததும், அடுப்பை அணைத்து, பொரித்த நட்ஸ், கிஸ்மிஸ், வெங்காயம் மற்றும் மாதுளை சேர்க்கவும். ராயல் காஷ்மீரி புலாவ் தயார்!