உலக பிரியாணி தினம்: பிரியாணி கடந்து வந்த பாதை!
மனிதர்களுக்கான அடிப்படைத் தேவைகளுள் மிக முக்கியமானது உணவு. அத்தியாவசியத் தேவையான உணவுடன், ஆடம்பரத் தேவையான சுவையும் சேர இன்று பசிக்காக உணவு என்ற நிலையைக் கடந்து ருசிக்காக உணவு என்ற நிலையை அடைந்திருக்கிறோம். ருசியான உணவு என்றவுடன் நமது மனதில் தோன்றும் முதல் உணவு பிரியாணி. ஆம், இந்தியாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த ருசியான உணவு என யாரிடமாவது கேட்டால், 10ல் 8 பேர் பிரியாணி என்றே பதிலளிப்பார்கள். அந்தளவிற்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகை பிரியாணி. இன்று உலகம் முழுவதும் இந்தியாவின் உணவு வகையாக அறியப்படும் பிரியாணி, உண்மையில் இந்திய உணவே அல்ல. பிரியாணி எங்கிருந்து இன்று வந்தது? உலக பிரியாணி தினமான இன்று பிரியாணியின் வரலாற்றையும் சற்று ஆராய்வோம்.
பிரியாணியின் வரலாறு:
உண்மையில் பிரியாணி ஒரு பெர்சிய நாட்டு (தற்போதைய இரான்) உணவு. இந்தியாவிற்கு எப்படி பிரியாணி வந்தது என்பது குறித்து பல்வேறு கதைகள் இருக்கின்றன. அவற்றுள் அதிகம் பேரால் கூறப்படுவது, இந்திய படையெடுப்பின் போது முகலாயர்களே பிரியாணியை இந்தியாவிற்கு கொண்டு வந்தார்கள் என்பதுதான். 15ம் முதல் 19ம் நூற்றாண்டு வரை இந்தியாவில் முகலாயர்கள் ஆட்சி செய்த போதே, பிரியாணியின் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. அதற்கு முன்னரும், இந்தியாவில் பிரியாணி இருந்ததாகவும், ஆனால் மக்கள் மத்தியில் அவ்வளவு பிரலமாக இல்லை எனவும் கூறப்படுகிறது. பிரியாணி பெர்சிய நாட்டு உணவாக இருந்தாலும் தற்போது இருக்கும் வடிவில் அங்கும், இங்கு கொண்டு வரப்பட்ட போதும், அது பரிமாறப்படவில்லை. மாறாக, அரிச சாதத்துடன் மாமிசத்தைச் சேர்த்து பிரியாணி என உண்டிருக்கிறார்கள் பெர்சியர்கள்.
இந்திய உணவான பிரியாணி:
பிரியாணி இந்திய உணவாக மாறியதற்கும், உலகம் முழுவதும் இந்திய உணவாகவே அறியப்படுவதற்கும் இந்திய மாசாலாப் பொருட்களின் பயன்பாடே காரணம். இந்தியாவிற்கு அரிசி சாதம் மற்றும் மாமிசத்தின் கலவையாக வந்தடைந்திருந்தாலும், இந்தியாவின் மாசால மற்றும் நறுமணப் பொருட்களுடன் இணைந்து வேறொரு புதிய பரிமானத்தை அடைந்தது பிரியாணி. அதுவே பிரியாணியை ஒரு தனித்துவமிக்க இந்திய உணவாக மாற்றியது. மேலும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளின் சமையல் முறையுடன் இணைந்து பல்வேறு வகைகளாகப் பிரிந்தது பிரியாணி. தற்போது இந்தியாவில் மட்டும் 26 வகையான பிரியாணிக்கள் பரிமாறப்படுகின்றனவாம். மேலும், பிரியாணியை சமைப்பதற்கு ஐந்து விதமான அரிசி வகைகள், பல்வேறு விதமான மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய பிரியாணி வகைகள்:
பெர்சிய பிரியாணியானது கொல்கத்தாவை அடைந்த போது, உருளைக்கிழங்குடன் சேர்த்து கொல்கத்தா பிரியாணியாக உருமாறியது. அதேபோல், ஹைதராபாத் மற்றும் ஆர்காட் ஆகிய இடங்களை அடைந்த போது, அந்தப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் உணவு முறைகளைக் கொண்டு ஹைதராபாதி பிரியாணியாகவும், ஆர்காட் பிரியாணியாகவும் உறுமாறியது. பிற இடங்களில் பிரியாணிக்கான மசாலாவையும், சாதத்தையும் தனித்தனியே சமைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இரண்டும் ஒன்றாக சமைக்கப்பட்டு புதுவித பிரியாணி உருவானது. அதிலேயே சிறந்த சுவையைக் கொண்டிருந்ததால் திண்டுக்கலைச் சேர்ந்த பிரியாணி வகையானது, 'திண்டுக்கல் பிரியாணி' என தனி பெயர் பெற்றது.
பிரியாணி: சில குறிப்புகள்
பயன்படுத்தும் உணவுப் பொருட்களைத் தவிர்த்து, சமைக்கும் முறையையும் வைத்து, புதிய பிரியாணி வகைகள் உருவாக்கப்பட்டன. மூங்கில் பிரியாணி, இளநீர் கூடு பிரியாணி, மண்பாணை பிரியாணி ஆகியவை அவற்றுள் சில வகை. பர்மா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலும் பிரியாணி தயாரிக்கப்படுகிறது. அசைவப் பிரியர்களுக்கு சிக்கன், மட்டன், மீன், நண்டு, ஃபீப் ஆகியவற்றைக் கொண்டும், சைவப் பிரியர்களுக்கு காளான், பனீர், முட்டையைக் கொண்டும் பிரியாணி வகைகள் தயாரிக்கப்படுகின்றன. திருமணம், காதுகுத்து, அரசியல் நிகழ்ச்சிகள் என இந்தியாவின் அனைத்து சுப மற்றும் துக்க நிகழ்வுகளிலும் நீங்கா இடம் பிடித்திருக்கும் பிரியாணி வெறும் உணவு அல்ல, அது ஒரு உணர்ச்சி!