Intermittent Fasting: சாதக பாதகங்கள் என்ன?
தற்போது உடல்நலத்தைப் பேனவும், உடல் எடையைக் குறைக்கவும் விரும்பும் பலரால் பின்பற்றப்படும் உணவுமுறைகளில் ஒன்று இடைக்கால விரதம் (Intermittent Fasting). அதாவது குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சாப்பிட்டு, மற்ற நேரங்களில் எதுவும் சாப்பிடாமல் இருப்பதையே இடைக்கால விரதம் என அழைக்கின்றனர். பொதுவாக, ஒரு நாளில் 12 மணி நேரத்தில் தொடங்கி 40 மணி நேரம் வரை சாப்பிடாமல் (குறைவான அளவு சாப்பிட்டு) இந்த இடைக்கால விரதத்தைப் பின்பற்றுகின்றனர். பெரும்பாலும், உடல்நலத்தைக் கடந்து உடல் எடையைக் குறைப்பதற்காகவே இந்த இடைக்கால விரத உணவுமுறையைப் பலரும் பின்பற்றுகின்றனர். என்ன சாப்பிடுகிறோம் என்பதனை பெரிதாக கணக்கில் கொள்ளாமல், எப்போது சாப்பிடுகிறோம் என்பதனையே இந்த உணவுமுறையில் முக்கியமாகக் கணக்கிட வேண்டும்.
இடைக்கால விரத உணவுமுறை: சாதகங்கள்
இந்த இடைக்கால உணவு முறையைப் பின்பற்றுபவர்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து அந்த நேரத்தில் மட்டுமே உணவருந்த வேண்டும். உதாரணத்திற்கு, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, எட்டு மணி நேரம் உணவுக்காக ஒதுக்கியிருந்தால், அந்த நேரத்தில் மட்டுமே உணவருந்த வேண்டும். மற்ற நேரங்களில் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம், உடல் எடை. கொலஸ்ட்ராஸ் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை குறையும். ரத்த சர்க்கரையின் அளவு மேம்படும். மூளைத் திறன் நன்றாக இருக்கும், வயது சார்ந்த நோய்களின் தாக்கம் குறைவாக இருக்கும் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் எனக் கூறப்படுகிறது.
இடைக்கால விரத உணவுமுறை: பாதகங்கள்
இந்த உணவுமுறையை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம் எனக் கூற முடியாது. உடலில் நோய்கள் எதுவும் இல்லாத, ஓரளவிற்கு ஆரோக்கியமாக இருப்பவர்கள் மட்டுமே இதனைப் பின்பற்ற முடியும். ஒரு நாளில் பெரும்பகுதி நேரத்தை நாம் சாப்பிடாமலேயே கழிக்க வேண்டியிருக்கும். எனவே, அனைவராலும் இந்த உணவுப்பழக்கத்தைத் தொடர்ந்து பின்பற்ற முடியாது. வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பருவ வயதினர், கர்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள், குறைந்த ரத்த அழுத்தம் உடையவர்கள் ஆகியோர் இந்த உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற முடியாது. நம்முடைய உடலில் எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை என்றாலும், மருத்துவரின் ஆலோசனையுடன் இவ்விதமான உணவுமுறைகளைப் பின்பற்றுவது பரிசீலிக்கப்படுகிறது.
இடைக்கால உணவுமுறை: கவனத்தில் கொள்ளவேண்டியவை
இந்தவகை டயட் முறையில், மூளையில் தன்னியக்கவியல் எனப்படும் செயல்முறையைத் தூண்டுகிறது. இந்த செயல்பாட்டின் போது, உங்கள் மூளை பகலில் உருவாகும் குப்பைகளை வெளியே எடுக்கிறது. அதாவது பழைய மற்றும் செயலிழந்த செல்களை நீக்குகிறது. அதனால், நீண்ட காலத்திற்கு அறிவாற்றல் நல்வாழ்வை ஆதரிக்கிறது. எனினும், இடைக்கால உணவுமுறையை தொடர்ந்து கடைபிடிப்பது காலப்போக்கில் சவாலாக இருக்கலாம்.அதனால் உங்கள் சமூக வாழ்க்கை பாதிக்கப்படலாம்.
நீங்கள் முயற்சி செய்ய வேண்டுமா?
இடைக்கால உணவுமுறை டயட்டின் சாதக பாதகங்களை பார்த்த பிறகு, இந்த டயட் முறையை பயிற்சித்து பார்ப்பதா வேண்டாமா என உங்களுக்குள் ஒரு யோசனை தோன்றலாம். ஏற்கனவே குறிப்பிட்டதை போல, இந்த டயட்டை முயற்சிக்கும் முன் மருத்துவரிடம் பேசுவது புத்திசாலித்தனம். குறிப்பாக நீங்கள் ஏதேனும் மருந்து உட்கொண்டிருக்கீறீர்கள் என்றாலோ அல்லது உடல்நலப் பிரச்சினைகள் இருந்தாலோ, மருத்துவரின் பரிந்துரைத்து முக்கியமாகிறது. பலருக்கு, 16 மணிநேர உண்ணாவிரத முயற்சிப்பது ஈஸியான விஷயமாக இருக்கும், சிலருக்கு சவாலாக இருக்ககைகூடும். உங்கள் உடல் சொல்வதை கேட்டு, தொடர்வது நல்லது.