Page Loader
2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை 45 கோடியைத் தொடும்: ஆய்வு
புதிய ஆய்வு எதிர்காலத்திற்கான கவலையளிக்கும் தகவலை தந்துள்ளது

2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை 45 கோடியைத் தொடும்: ஆய்வு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 04, 2025
08:50 am

செய்தி முன்னோட்டம்

இன்றைய இளைய சமூகத்தினரிடம் அதிகரித்து வரும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் துரித உணவு வழக்கத்திற்கு மத்தியில், ஒரு புதிய ஆய்வு எதிர்காலத்திற்கான கவலையளிக்கும் தகவலை தந்துள்ளது. லான்செட் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில், 2050 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் 450 மில்லியன் (45 கோடி) 25 வயதுக்கு மேற்பட்ட வயதுடையோர், உடல் பருமன் அல்லது அதிக எடை கொண்டவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 180 மில்லியன் பருமனான அல்லது அதிக எடை கொண்ட மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரிப்பதை ஆய்வு காட்டுகிறது.

ஆய்வு

அதிக எடை கொண்டவர்கள் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது

ஆறுதலாக இந்த போட்டியில் இந்தியாவிற்கு முன்னதாக சீனா உள்ளது. அங்கு 2050 ஆம் ஆண்டுக்குள் 627 மில்லியன் அதிக எடை அல்லது பருமனான மக்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. நம்மைத்தொடர்ந்து அமெரிக்கா உள்ளது. அங்கு அதிக எடை கொண்டவர்கள் எண்ணிக்கை 214 மில்லியனை எட்டுகிறது. இந்த ஆய்வின்படி, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவை "அதிக எடை மற்றும் உடல் பருமன் உள்ளவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மூன்று நாடுகளாக" கண்டறியப்பட்டது.

வரலாறு 

2021 நிலவரப்படி புள்ளிவிவரங்கள்

2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, சீனா 402 மில்லியன் மக்களுடன் முதலிடத்திலும், இந்தியா 180 மில்லியன் மக்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 172 மில்லியன் மக்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான பருமனான அல்லது அதிக எடை கொண்ட மக்கள் இருந்தபோதிலும், வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு சூப்பர் பிராந்தியத்தில் உடல் பருமன் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவுடன் சேர்த்து, சீனா, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, மெக்சிகோ, இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகிய ஏழு நாடுகள், உலகளாவிய பருமனான மக்கள்தொகையை கொண்டுள்ளன.

காரணிகள்

உடல் எடை அதிகரித்த மக்கள் தொகை பெருகுவதற்கு காரணிகள் என்ன?

துரித உணவுச் சங்கிலிகள் அதிக வருமானம் கொண்ட நாடுகளிலிருந்து (HICs) குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு (LMICs) தங்கள் கவனத்தை மாற்றியுள்ளதால், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உடல் பருமன் போக்கு அதிகரித்துள்ளது. ஆய்வின்படி, LMIC இல், "மக்கள்தொகை வளர்ச்சி, தனிநபர் வருமானத்தில் முன்னேற்றம் மற்றும் பலவீனமான விதிமுறைகள் விரிவாக்கத்திற்கு சாதகமான சந்தைகளை உருவாக்கியுள்ளன" என்று கூறுகிறது. 2009 மற்றும் 2019 க்கு இடையில் தனிநபர் அதி-பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பான விற்பனையில் மிகப்பெரிய வருடாந்திர வளர்ச்சி இந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ளது.