நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி ஒரு பார்வை
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகியவை திங்கள்கிழமை நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. இந்தச் சட்டங்கள் முறையே காலனித்துவ கால இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றும். இந்த சட்டங்கள் கூறுவது என்ன என்பதையும் அவற்றின் கீழ் வழங்கப்படும் தண்டனைகளை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
பாரதிய நியாய சந்ஹிதா
பாரதிய நியாய சன்ஹிதாவில் 358 பிரிவுகள் உள்ளன (ஐபிசியின் 511 பிரிவுகளுக்கு பதிலாக). சன்ஹிதாவில் மொத்தம் 20 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 33 குற்றங்களுக்கான சிறைத்தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதோடு, 83 குற்றங்களில் அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதுடன், 23 குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டனையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாலியல் குற்றங்களைக் கையாள்வதற்காக 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்' என்ற தலைப்பில் புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட பெண்களை கற்பழிப்பது தொடர்பான விதிகளில் மாற்றங்களையும் இந்த சட்டம் முன்மொழிந்துள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் சன்ஹிதா
பாரதிய நியாய சன்ஹிதாவில், 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்யும் புதிய குற்றப் பிரிவு மற்றும் கூட்டுப் பலாத்காரம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும், குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும். மோசடியான முறையில் உடலுறவில் ஈடுபடும் நபர்களுக்கு அல்லது திருமணம் செய்து கொள்வதற்கான உண்மையான நோக்கமின்றி, திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்கும் நபர்களுக்கும் இந்த புதிய சட்டம் தண்டனைகளை வழங்குகிறது. பாரதீய நியாய சன்ஹிதாவில் முதன்முறையாக பயங்கரவாத செயல்களுக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. சன்ஹிதாவில், பயங்கரவாத செயல்களுக்கு மரண தண்டனை அல்லது பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்படும். சன்ஹிதாவில் பலவிதமான பயங்கரவாத குற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, பொது வசதிகள் அல்லது தனியார் சொத்துக்களை அழிப்பது ஒரு குற்றம்.
மாற்றம் செய்யப்பட்ட எஃப்ஐஆர் விதிகள்
இந்த புதிய சட்டத்தில், பூஜ்ஜிய எஃப்ஐஆர் பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தபட்டுள்ளது, அதாவது குற்றம் நடந்த பகுதியைப் பொருட்படுத்தாமல், எஃப்ஐஆர் எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யப்படலாம். இதில், பாதிக்கப்பட்டவர் எப்ஐஆரின் நகலை இலவசமாகப் பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து பாதிக்கப்பட்டவருக்கு 90 நாட்களுக்குள் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து பாதிக்கப்பட்டவருக்கு 90 நாட்களுக்குள் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நபர் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை. மின்னஞ்சல் அல்லது ஆப் மூலமாக ஆன்லைன் புகார் அளிக்கலாம். தனிநபர் கைது செய்யப்படும்போது, தனக்கு தெரிந்த நபருக்கு உடனடியாக அதை பற்றிய தகவலை அளிக்க புதிய சட்டம், உரிமை வழங்குகிறது.
தேங்கி நிற்கும் வழக்குகளை குறைக்க ஒரு செக்
புதிய சட்டங்களின் ஒரு பகுதியாக, ஒரு வழக்கில் நீதிமன்றங்கள் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் பலகாலம் வழக்கின் விசாரணை இழுத்தடிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. மேலும், மருத்துவ அலட்சியத்தால் உயிரிழப்புகள் நேரும்போது அதற்குக் காரணமாக இருந்த மருத்துவருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த சட்டத்திற்கு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.