தீபாவளியில் நம்பர் 1 இனிப்பு காஜு கத்லி: அடுத்ததாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகை என்றாலே விதவிதமான இனிப்புகளும் சுவையான உணவுகளும்தான் அனைவரின் நினைவிற்கும் வரும். இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தியர்கள் ஆன்லைன் மூலமாக உணவு ஆர்டர் செய்வதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். பிரபல உணவு விநியோகத் தளமான ஸ்விக்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உணவு ஆர்டர்கள் 10.7 சதவீதம் அதிகரித்துள்ளன. நாடு முழுவதும் இனிப்பு வகைகளில் வழக்கம் போல் காஜு கத்லி முதலிடத்தைப் பிடித்து தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துள்ளது.
மசாலா தோசை
இனிப்புகளுக்கு அடுத்தபடியாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட மசாலா தோசை
காஜு கத்லியைத் தொடர்ந்து மோத்திச்சூர் லட்டு, ரசகுல்லா மற்றும் குலாப் ஜாமூன் ஆகிய இனிப்புகள் அதிக அளவில் வாங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பெங்களூரு, மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் காஜு கத்லி விற்பனை உச்சத்தில் இருந்தது.
அதே சமயம் கார உணவு வகைகளில் மசாலா தோசை மற்றும் பன்னீர் பட்டர் மசாலா ஆகியவை நாடு முழுவதும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டு ஆச்சரியமளித்துள்ளன.
மேலும் பிராந்திய உணவுகளான ஆப்பம் மற்றும் சமோசாவும் பிரபலமான பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இனிப்பு ஆர்டர்கள்
ஹைதராபாத் மற்றும் மும்பையில் அதிகளவில் பதிவான இனிப்பு ஆர்டர்கள்
பண்டிகை கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பல வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் மிகப்பெரிய அளவிலான உணவு மற்றும் இனிப்பு ஆர்டர்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் 57 பாக்கெட்டுகள் கொண்ட பலவகை இனிப்புகளை ₹41,895 மதிப்பிற்கு ஆர்டர் செய்து அசத்தியுள்ளார்.
இதேபோல் மும்பையில் உள்ள மற்றொரு வாடிக்கையாளர் தீபாவளி தினத்தன்று ₹41,772 மதிப்பிலான ஏழு பிரம்மாண்ட இனிப்பு பரிசுப் பெட்டிகளை வாங்கிப் பண்டிகையை சிறப்பித்துள்ளார்.
குடும்பங்களின் முன்பதிவு
வீட்டு உணவுகளைத் தாண்டி உணவகங்களில் குவிந்த குடும்பங்களின் முன்பதிவு
ஆன்லைன் மூலம் வீட்டிற்கு உணவுகளை வரவழைத்தது மட்டுமின்றி, குடும்பத்தினருடன் வெளியே சென்று உணவகங்களில் சாப்பிடுவதற்கும் மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
ஸ்விக்கியின் டைன்அவுட் தளம் வழியாகத் தீபாவளி தினத்தன்றும் அதற்கு முந்தைய நாளும் உணவக இருக்கை முன்பதிவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய முக்கிய மெட்ரோ நகரங்களில் உணவக முன்பதிவுகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.