உலகில் சிறந்த உணவுகளை கொண்ட நாடுகளின் தரவரிசையில் 11வது இடத்தைப் பிடித்த இந்தியா
டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள சிறந்த உணவு வகைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி, இந்தியா 11வது இடத்தை பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே, இத்தாலி உணவு வகைகளும், ஜப்பான் மற்றும் கிரேக்க நாட்டு உணவு வகைகள் பிடித்துள்ளன. தனது தளத்தில் பதிவுசெய்யப்பட்ட உணவு மதிப்பீடுகளின் அடிப்படையில் தரவரிசை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. "395,205 பயனர் மதிப்பீடுகளின் (271,819 செல்லுபடியாகும்) அடிப்படையில் பட்டியலிடப்பட்ட 10,927 உணவுகளில், இந்த 100 உணவுகள் அதிக மதிப்பீடுகளைப் பெற்றன" என அந்நிறுவனம் தனது வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தது.
சிறந்த உணவு வகைகளில் 7வது இடத்தில் பட்டர் நான்
சிறந்த 100 உணவு வகைகளை பொறுத்தவரையில், 7வது இடத்தில் பட்டர் கார்லிக் நான், 43வது இடத்தில் பட்டர் சிக்கன், 47வது இடத்தில் சிக்கன் டிக்கா, 48வது இடத்தில் சிக்கன் தந்தூரி ஆகிய இந்திய உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் பிரேசிலிய மாட்டிறைச்சி கட் பிக்கன்ஹா, பிளாட்பிரெட் ரொட்டி கனாய், பாட் கப்ராவ், பிஸ்ஸா நெப்போலிடெனா ஆகிய உணவு வகைகள் முதலிடங்களை பிடித்துள்ளன. முன்னதாக டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டு இருந்த மிகச்சிறந்த உணவு உணவகங்களின் பட்டியலில், கொல்கத்தாவின் பீட்டர் கேட், லக்னோவின் துண்டே கபாபி மற்றும் கோழிக்கோடு பாராகான் உணவகம் ஆகியவை, அதிக மதிப்பெண்களைப் பெற்று இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.