பேறுகால சிக்கல்கள் குறைந்தாலும், அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்கள்: IIT மெட்ராஸ் ஆய்வில் தகவல்
ஐஐடி மெட்ராஸ் ஆய்வின் அடிப்படையில், கடந்த 2016 மற்றும் 2021க்கு இடையில் தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில், சிசேரியன் (சி-பிரிவு) பிரசவங்கள் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு குறித்த அறிக்கை, பிஎம்சி கர்ப்பம் மற்றும் பிரசவம் என்ற சக மதிப்பாய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சிசேரியன் (சி-பிரிவு) பிரசவம் என்பது ஒரு அறுவை சிகிச்சை நுட்பமாகும். இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பிரசவிப்பதற்காக தாயின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்வதை குறிக்கிறது.
எதற்காக சிசேரியன் செய்யப்படுகிறது?
மருத்துவ ரீதியாக நியாயப்படுத்தப்பட்டால், தாய் மற்றும் சேயின் உயிர் காக்க இந்த இந்த செயல்முறை பயன்படுத்தப்படும். எவ்வாறாயினும், கண்டிப்பாக தேவையில்லாத போது, அது பல பாதகமான சுகாதார விளைவுகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற செலவினங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் பற்றாக்குறையான பொது சுகாதார வளங்களை கஷ்டப்படுத்தலாம். அதோடு சில நேரங்களில் பாதகமான பிறப்பு விளைவுகளுக்கும் சிசேரியன் பங்களிக்கும். சி-செக்ஷன் செய்ய வேண்டிய நியாயமான காரணிகள்: தாயின் வயது 18 வயதுக்கு குறைவாக அல்லது 34 வயதுக்கு மேல், பிறப்புகளுக்கு இடையேயான இடைவெளி 24 மாதங்களுக்கும் குறைவாக இருப்பது அல்லது குழந்தை நான்காவது அல்லது அதற்கு மேல் பிறந்தது போன்ற அதிக ஆபத்துள்ள பிரசவ நிலைகள் போன்றவை.
ஆய்வறிக்கை தெரிவிப்பது என்ன?
தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரில் நடத்தப்பட்ட ஆழமான பகுப்பாய்வில், சத்தீஸ்கரில் கர்ப்ப சிக்கல்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள கருவுறுதல் நடத்தை இரண்டும் அதிகமாக காணப்பட்டாலும், தமிழ்நாட்டில் இவை ஏதும் அதிகமாக இன்றியே சி-செக்ஷன் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். "ஒரு முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், டெலிவரி இடம் (பொது அல்லது தனியார் மருத்துவமனை) சி-செக்ஷன் மூலம் பிரசவிப்பத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது 'மருத்துவ தேவை' காரணிகள் அவசியமில்லை என்பதையே குறிக்கிறது" என்று ஐஐடி மெட்ராஸின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறை பேராசிரியர் வி.ஆர்.முரளீதரன் கூறினார். சத்தீஸ்கரில், ஏழைகள் அல்லாதவர்கள் சி-செக்ஷன்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்பட்டது. அதேநேரத்தில் தமிழ்நாட்டில், தனியார் மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஏழைகள் நிறைய பேர், சிசேரியன் மூலம் பிரசவித்துள்ளனர்.
இரண்டு மாநிலங்களில் அதிகரித்துள்ள சி-செக்ஷன் எண்ணிக்கை
இரண்டு மாநிலங்களில் 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில் சி-செக்ஷன்களின் பாதிப்பு 17.2%லிருந்து 21.5% ஆக அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனையில், இந்த எண்கள் 43.1%(2016) மற்றும் 49.7%(2021) ஆக உள்ளன. அதாவது தனியார் மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட இரண்டு டெலிவரிகளில் ஒன்று சி-செக்ஷன் ஆகும். இந்த அதிகரிப்புக்கு பல காரணிகள் இருக்கலாம். நகர்ப்புறங்களில் வசிக்கும் படித்த பெண்களுக்கு சி-செக்ஷன் மூலம் பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சி-செக்ஷன்களின் பரவல் அதிகரிப்பதில் சுகாதார வசதிகளுக்கான சிறந்த அணுகல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வறிக்கை அறிவுறுத்துகிறது. சி-செக்ஷன் மூலம் பிரசவிக்கும் அதிக எடை கொண்ட பெண்களின் விகிதம் 3%லிருந்து 18.7%ஆகவும் அதிகரித்தும், 35-49 வயதுடைய பெண்களின் விகிதம் 11.1%லிருந்து 10.9%ஆகவும் குறைந்துள்ளது.