உங்கள் இந்திய பாஸ்போர்ட்டில் பல வருட ஷெங்கன் விசாவை எவ்வாறு பெறுவது?
இந்த ஆண்டு ஐரோப்பாவிற்கு செல்ல விரும்பும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான ஷெங்கன் விசா நடைமுறைகளை எளிதாக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் 22 அன்று ஒரு செய்திக்குறிப்பில், ஐரோப்பிய ஆணையம் இந்தியாவிற்கான புதிய விசா 'கேஸ்கேட்' விதிமுறையை அறிவித்தது. இது அடிக்கடி ஐரோப்பாவிற்கு பயணிப்பவர்கள், மல்டிபிள் என்ட்ரி, மல்டிபிள் இயர் ஷெங்கன் விசாவிற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. நீங்கள் ஷெங்கன் பகுதிக்கு அடிக்கடி பயணிப்பவராக இருந்தால், பல ஆண்டு நுழைவு விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். இந்த புதிய விசா 'கேஸ்கேட்' முறையானது பல ஆண்டு செல்லுபடியாகும் விசாக்களை எளிதாக பெற வழிவகை செய்கிறது.
மல்டிபிள் என்ட்ரி, மல்டிபிள் இயர் ஷெங்கன் விசா
கேஸ்கேட் முறை என்பது நிறுவப்பட்ட பயண வரலாற்றைக் கொண்ட இந்திய பயணிகளுக்கானது. பல வருட ஷெங்கன் விசாவிற்கு முன் உங்கள் பாஸ்போர்ட் காலாவதியாகமால் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் இரண்டு ஷெங்கன் விசாக்களை பெற்று பயன்படுத்தியிருந்தால், நீங்கள் இரண்டு வருட பல நுழைவு விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். அதன் பின்னர் உங்கள் பாஸ்போர்ட் செல்லுபடியானால், இந்த இரண்டு வருட விசாவை அடுத்து ஐந்தாண்டு விசா வழங்கப்படும். உங்கள் ஷெங்கன் விசா செல்லுபடியாகும் போது, விசா இல்லாத குடிமக்கள் போன்ற அதே பயண உரிமைகளுடன் நீங்கள் அந்தப் பகுதியைப் பார்வையிடலாம். இந்த விசா, 180 நாட்களில் அதிகபட்சமாக 90 நாட்கள் ஷெங்கன் பகுதியில் சென்று தங்குவதற்கு உங்களை அனுமதிக்கும்.