நோயிலிருந்து மீண்ட பிறகு உடற்பயிற்சி செய்வது எப்படி: நிபுணர் குறிப்புகள்
மனிதனுக்கு, நோய் தொற்று எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அது எத்தனை நாள் நீடிக்கும் என்றும் கணிக்க முடியாது. உடல்நலம் பாதிக்கும்போது, உங்கள் அன்றாட வேலை முதல் தினசரி உடற்பயிற்சி வரை அனைத்தும் பாதிக்கப்படுகிறது. தினசரி உடற்பயிற்சி செய்து பழக்கப்பட்டவர்களுக்கு, இது மிகவும் கடினமாக இருக்கலாம். நோயிலிருந்து மீண்ட பிறகு, உடற்பயிற்சிகளை எவ்வாறு தொடங்குவது என நிபுணர்கள் விளக்கியுள்ளார்கள். உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன், குறைந்தது 48 மணிநேரம் காய்ச்சல் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காய்ச்சல் இருக்கும்போது உடற்பயிற்சி செய்தால், பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராட உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்குத் தேவையான ஆற்றல் கிடைக்காது. உங்கள் உடல் ஓய்வெடுக்கவும், விரைவாக குணமடையவும், உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன், இரவில் சரியான தூக்கம் அவசியம்.
எடுத்தவுடன் தீவிரமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம்
நோயிலிருந்து மீண்ட முதல் சில நாட்களுக்கு, மிதமான மற்றும் குறுகிய கால உடற்பயிற்சிகளைத் தொடங்குங்கள். உடற்பயிற்சிகளுக்கு இடையில் குறைந்தது இரண்டு நாட்களாவது ஓய்வெடுக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஊட்டச்சத்துகள் நிரம்பிய உணவு மற்றும் திரவ உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு, சோர்வடைந்த உடலுக்கு ஊட்டமளிக்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகள், ஊட்டச்சத்துகள் அடங்கியவை. அதனால் உடல்நலன் தேறும்போதும், அதற்குப் பிறகும், அதிகமாக சாப்பிட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம். பிளான்க்ஸ், ஸ்குவாட்ஸ் போன்ற ஐசோமெட்ரிக் பயிற்சிகள்உங்கள் உடலின் தசைகளுக்கு அதிகம் இயக்கம் தராத உடற்பயிற்சிகள் ஆகும், இவற்றை நீங்கள் தினசரி பயிற்சி செய்யலாம்.