டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் தேவைப்படும் மருந்துகளுக்கு விளம்பரம் செய்ய முடியாது! சில்லறை, மொத்த விற்பனையாளர்களுக்கு மத்திய அரசு தடை
செய்தி முன்னோட்டம்
இந்திய மருந்து விநியோக சங்கிலியில் உள்ள மிகப்பெரிய ஒழுங்குமுறை சட்ட முரண்பாடுகளைக் களையும் வகையில், சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மருத்துவர்களின் பரிந்துரை தேவைப்படும் வீரியமிக்க மருந்துகளை பகிரங்கமாக விளம்பரம் செய்வதற்குத் தடை விதிக்க மத்திய அரசு புதிய வரைவு விதிகளை வெளியீட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் அனுமதி பெறாமல் இத்தகைய மருந்துகளை இனி விளம்பரம் செய்ய முடியாது என மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
புதிய திருத்தம்
விதிமுறைகளில் கொண்டுவரப்படும் புதிய திருத்தம்
தற்போதுள்ள சட்ட விதிகளின்படி, தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே ஷெட்யூல் H, H1 மற்றும் X பிரிவுகளின் கீழ் வரும் வீரியமிக்க மருந்துகளை விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மருந்துகளை சில்லறை மற்றும் மொத்த விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இந்த விதிகள் தெளிவாகப் பொருந்தவில்லை.
இதைக் கருத்தில் கொண்டு, மருந்துகள் விதிகள் 1945-ன் விதி 65-ன் கீழ் புதிய திருத்தங்களை சேர்க்க சுகாதார அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
செப்டம்பர் 28 நாளிட்ட அரசிதழில் இது வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மருந்தகங்கள்
ஆன்லைன் மருந்தகங்கள் மற்றும் மருந்துக் கடைகளுக்குச் செக்
மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் 93-வது கூட்டப் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சாதாரண மருந்துக்கடைகள், பெரிய விநியோகஸ்தர்கள் மற்றும் ஆன்லைன் மருந்தக பிளாட்ஃபார்ம்கள் அனைத்தும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.
பொதுமக்களின் கருத்துகள் மற்றும் எதிர்ப்புகளைத் தெரிவிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு இறுதி அரசாணை வெளியிடப்படும்
சுய மருத்துவம்
சுய மருத்துவத்தைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை
ஷெட்யூல் H, H1 மற்றும் X பிரிவுகளில் தீவிரக் கட்டுப்பாட்டு மருந்துகள், காசநோய் மருந்துகள், ஆன்டிபயாடிக்குகள் மற்றும் பழக்கத்தை ஏற்படுத்தும் போதை மருந்துகள் இடம்பெற்றுள்ளன.
இத்தகைய மருந்துகள் விளம்பரம் செய்யப்படுவதன் மூலம் பொதுமக்கள் மருத்துவ ஆலோசனை இன்றி சுய மருத்துவம் செய்துகொள்வது அதிகரிக்கிறது.
இந்த ஆபத்தைத் தடுத்து, தகுந்த மருத்துவக் கண்காணிப்பின் கீழ் மட்டுமே மருந்துகள் விற்பனையாவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.