குழந்தைகளுக்கு தயாரிக்க கூடிய ராகி உளுந்து கஞ்சியின் நற்பயன்கள் தெரியுமா?
தாய்ப்பால் குழந்தைகளுக்கு சிறந்த உணவு. கட்டாயமாக பிறந்த குழந்தைகளுக்கு 5 - 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பின்னர் மருத்துவர்கள் ஆரோக்கிய உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக திரவ வடிவத்தில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள். அந்த வகையில், பழ ஜூஸ், காய்கறி சேர்த்த சூப் போன்றவற்றுடன் கட்டாயம் தரவேண்டியது கஞ்சி. ஆரம்பத்தில் அரிசி கஞ்சியாக தொடங்கி, மெல்ல மெல்ல சிறுதானியங்கள் சேர்த்து கொடுக்கலாம். அதே போல, ராகியுடன், கருப்பு உளுந்தை சேர்த்தும் கஞ்சியாக தரலாம். இந்த கஞ்சியில் புரதம் கால்சியம் உட்பட குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ளது. ராகி மற்றும் கருப்பு உளுந்தை நன்றாக கழுவி, தனித்தனியாக வறுத்து, பொடியாக்கி, தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
ராகி & கருப்பு உளுந்து சேர்ப்பதால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள்
ராகி அல்லது கேழ்வரகில் புரதம், நார்ச்சத்து அதிகம் உள்ளது. பசும்பாலை விட அதிக ஊட்டச்சத்து நிறைந்தது இந்த சிறுதானியம். இதில் க்ளூட்டன் இல்லாததால், குழந்தைக்கு எளிதாக செரிமானம் ஆக கூடும். எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. கேழ்வரகில் இரும்புச்சத்து உள்ளதால், குழந்தைகளுக்கு இரத்த சோகை வராமல் காக்கிறது. குடல் இயக்கங்கள் சீராக இயங்க கேழ்வரகு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கருப்பு உளுந்து கால்சியம் மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. கருப்பு உளுந்தில் அதிக புரதம் உள்ளதால், குழந்தைகளின் ஆரோக்கியமான எடை அதிகரிப்புக்கு ஏற்றது. குழந்தைகளிடையே உண்டாகும் மலச்சிக்கலை தடுக்கிறது