மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்: டெல்லி காவல்துறை
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் நேற்று பலமுறை கோரிக்கை விடுத்தும் சட்டத்தை மீறினர், அதனால்தான் டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்களின் போராட்டம் நிறுத்தப்பட்டது என்று டெல்லி காவல்துறை இன்று(மே 29) தெரிவித்துள்ளது.
டெல்லியில் பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர்கள், நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
தேசிய தலைநகரில் உள்ள புதிய நாடாளுமன்றத்திற்கு நேற்று பேரணியாக சென்று கொண்டிருந்த மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் முரட்டுத்தனமாக கையாள்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
"ஜனநாயகத்தின் கோவில்" என்று அழைக்கப்படும் புதிய நாடாளுமன்றத்தில் இருந்து வெறும் இரண்டு கிமீ தொலைவில், மகளிர் தடகள வீராங்கனைகள் இப்படி கொடூரமாக நடத்தப்பட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
details
புது டெல்லி காவல்துறை துணை ஆணையர் ட்வீட்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறையினர், இந்தியாவின் தலை சிறந்த விளையாட்டு வீரர்களை கைது செய்த போது, பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தில் தான் இருந்தார் என்று சமூக வலைத்தளங்களில் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கலவரத்தை தூண்டியதாகவும், சட்டவிரோத கூட்டத்தை நடத்தியதாகவும், பொது ஊழியர்களின் கடமையை செய்ய விடாமல் தடுத்ததாகவும் மல்யுத்த வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், புது டெல்லி காவல்துறை துணை ஆணையர் "எதிர்காலத்தில் மல்யுத்த வீரர்கள் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட அனுமதி கோரி விண்ணப்பித்தால், ஜந்தர் மந்தரைத் தவிர வேறு எந்த பொருத்தமான, அறிவிக்கப்பட்ட இடங்களிலும் அனுமதிக்கப்படுவார்கள்" என்று இன்று ட்வீட் செய்துள்ளார்.