ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றம்: ஒரு அலசல்
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் 'நாரி சக்தி வந்தன் ஆதினியம்' அல்லது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் 215-0 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. புதன்கிழமை மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் கிடைத்தன. கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் 27 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மசோதாவுக்கு புத்துயிர் அளித்து இந்த வாரம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சியும் (பாஜக) காங்கிரஸும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக இழுபறியில் ஈடுபட்டாலும், இந்தச் சாதனை ஆளும் பாஜகவிற்கு, வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு சாதகமாகவே இருக்கும்
காங்கிரசால் கொண்டுவரப்பட்ட மசோதா
இந்த மசோதா முதலில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது, அது இரு அவைகளிலும் நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்தது. சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) உள்ளிட்ட கட்சிகள், இந்த மசோதாவை பல ஆண்டுகளாக எதிர்த்து வந்தன. இந்நிலையில் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை இந்த முறை மாற்றியதால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது . 2010ல் இந்த மசோதாவை எதிர்த்த SP, இம்முறை அதை ஆதரித்தது. எனினும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு துணை ஒதுக்கீட்டுக்கான கோரிக்கைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
2010ல் என்ன நடந்தது?
2010 ஆம் ஆண்டில், ராஜ்யசபாவில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 186 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் பெற்று, பலத்த விவாதத்திற்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இரண்டு சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் அப்போதைய தலைவர் ஹமீத் அன்சாரியின் மேஜை மீது ஏறினர். சமாஜ்வாதி கட்சியின் நான்கு எம்.பி.க்களும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் முன்னாள் லோக் ஜனசக்தி கட்சி (எல்.ஜே.பி.) ஆகியவற்றின் தலா ஒருவரும், கண்டிக்கத்தக்க நடத்தை காரணமாக அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து எஸ்பி மற்றும் ஆர்ஜேடி எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் 12 பிஎஸ்பி எம்பிக்களும் வாக்களிப்பில் இருந்து வெளியேறினர்.
2029 -இல் நடைமுறைக்கு வருமா இந்த இட ஒதுக்கீடு மசோதா?
தற்போது ஏகமனதாக நிறைவேற்ற பட்ட இந்த மசோதா நடைமுறைக்கு வர சில காலம் ஆகும் என ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம். 2027-ல் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகுதான் பெண்கள் ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும். எனவே, 2029ம் ஆண்டு வரை இந்த மசோதா அமலுக்கு வராமல் போகலாம். தற்போது லோக்சபாவில் 82 பெண் எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் 24 பெண் எம்.பி.க்களும் உள்ளனர். எனினும், பெண்களுக்கான இடஒதுக்கீடு, மாநிலங்களவை மற்றும் மாநில சட்ட மேலவைகளுக்கு நீட்டிக்கப்படாமல், கீழ்சபை மற்றும் சட்டப் பேரவைகளுக்கு மட்டுமே நீட்டிக்கப்படும் என செய்திகள் கூறுகின்றன.
மற்ற நாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன?
உலகளவில், அரசியலில் அதிக பெண் பிரதிநிதித்துவம் கொண்ட நாடுகளான ஸ்வீடன்(46%), தென்னாப்பிரிக்கா (45%), ஆஸ்திரேலியா (38%), பிரான்ஸ்(35%) மற்றும் ஜெர்மனி(35%) போன்ற நாடுகளில் இட ஒதுக்கீடு இல்லை. வங்கதேசம் 300 நாடாளுமன்ற இடங்களில் 50 இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது, தற்போது 21% பெண் எம்.பி.க்கள் உள்ளனர். எரித்திரியா, ருவாண்டா மற்றும் தான்சானியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளும் இதே போன்ற ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் 185 நாடுகளில், இந்தியா 141 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) 42% பெண் எம்பிக்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) 39% உள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு 14% வாக்குகள் கிடைத்துள்ளன.