இந்தியா-சீனா போரால் காதலியை இழந்த ரத்தன் டாடா; திருமணம் செய்யாததன் பின்னணி இதுதான்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா புதன்கிழமை (அக்டோபர் 9) இரவு மும்பை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 86. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சால்ட் டு சாப்ட்வேர் குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா, கடந்த திங்கட்கிழமை முதல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக, 2020இல் ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பேக்கு அவர் அளித்த நேர்காணலில், தனது குழந்தைப் பருவத்தின் ஆரம்ப நாள், பெற்றோரின் விவாகரத்து மற்றும் அவர் கிட்டத்தட்ட திருமணம் வரை சென்று தடைபட்டது ஆகியவற்றைப் பற்றி நீண்ட நேரம் பேசிய விஷயங்கள் பேசியிருந்தார்.
பாட்டியின் வளர்ப்பில் ரத்தன் டாடா
தனது குழந்தைப் பருவம் குறித்து ரத்தன் டாடா கூறுகையில், "எனக்கு மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் இருந்தது. ஆனால் நானும் என் சகோதரனும் வளர்ந்துவிட்டதால், எங்கள் பெற்றோரின் விவாகரத்து காரணமாக நாங்கள் சில ராகிங் மற்றும் தனிப்பட்ட அசௌகரியங்களை எதிர்கொண்டோம். அந்த நாட்களில் விவாகரத்து இன்று போல் இல்லை. ஆனால் என் பாட்டி எங்களை எல்லா வகையிலும் நன்றாக வளர்த்தார். என் அம்மா மறுமணம் செய்து கொண்ட உடனேயே, பள்ளியில் உள்ள பையன்கள் எங்களைப் பற்றி மோசமாக பேசத் தொடங்கினர். அது எங்களுக்கு ஆக்ரோஷத்தைத் தூண்டினாலும், எங்கள் பாட்டி எந்த நேரத்திலும் கண்ணியத்தைத் தக்க வைத்துக் கொள்ள கற்றுக் கொடுத்தார். அந்த மதிப்பு இன்று வரை என்னுடன் இருக்கிறது." என்றார்.
கிட்டத்தட்ட கல்யாணம் வரை சென்று தடைபட்டது ஏன்
தனது திருமணம் குறித்து பேசிய ரத்தன் டாடா, கட்டிடக்கலையில் பட்டம் பெற்ற பிறகு, முதலில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு கட்டிடக்கலை நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததாகவும், அங்கு ஒரு பெண்ணை காதலித்து கிட்டத்தட்ட திருமணம் வரை சென்றதாகவும் கூறினார். ஆனால் அதே நேரத்தில், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த தன் பாட்டியை விட்டு விலகியிருந்ததால், தற்காலிகமாக இந்தியா திரும்ப முடிவு செய்ததாக தெரிவித்த ரத்தன் டாடா, காதலியும் தன்னுடன் இந்தியா வருவார் என எதிர்பார்த்ததாகக் கூறினார். எனினும், 1962 இந்தியா-சீனா போரின் காரணமாக, தனது காதலியின் பெற்றோருக்கு இதில் உடன்பாடு இல்லாததால், அந்த உறவு முறிந்ததாகக் கூறியுள்ளார். அதன் பின்னர் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.