அயோத்தி ராமர் கோயில்- ஆயிரம் ஆண்டுகளுக்கு புணரமைப்பு தேவைப்படாது, 6.5 அளவிலான பூகம்பத்தையும் தாங்கும்
நான்கு வருடங்களுக்கு முன்னர் அயோத்தி ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழி வகுத்ததை தொடர்ந்து, முதல் கட்ட பணிகள் முடிக்கப்பட்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இக்கோயில் நன்கு அறியப்பட்ட, கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் பாய் சோம்புராவின் கீழ் ஒரு குழுவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயில் கட்ட ராஜஸ்தானின் மிர்சாபூர் மற்றும் பன்சி-பஹர்பூரில் இருந்து இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் பளிங்கு கற்கள், முதன்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, தல 2 டன் இடை கொண்ட 17,000 கிரானைட் கற்களும், கட்டிட பணிகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்காக கட்டப்பட்ட கட்டிடம்
நிபுணர்களின் அறிவுறுத்தலின் பேரில், சாதாரண சிமெண்ட் மற்றும் கம்பிகள் இந்த கோயில் கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்தப்படவில்லை. சென்னை ஐஐடி பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின் பேரில், சுமார் 12 மீட்டர் ஆழத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது. அஸ்திவாரத்தை மூட பயன்படுத்தப்பட்டுள்ள மண் 28 நாட்களில், கற்களாக மாறும் தன்மை உடையது. ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், இந்த கட்டுமானத்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு கோயிலுக்கு புறனமைப்பு பணிகள் தேவைப்படாது எனவும், 6.5 ரிக்டர் அளவிலான பூகம்பத்தையும் இதனால் தாங்க முடியும் என தெரிவித்தார்.
கட்டுமான பணியில் எஞ்சியுள்ள கட்டங்கள்
கருவறை அமைந்துள்ள தரை தளத்தின் கட்டுமான பணி டிசம்பர் 15ஆம் தேதி முடிவடையும் நிலையில், இன்னும் இரண்டு கட்ட கட்டுமான பணிகள் எஞ்சியுள்ளன. முதல் மற்றும் இரண்டாவது தளங்கள், அனைத்து சுவரோவியங்கள் மற்றும் ஐகானோகிராஃபி வேலைகள், கீழ் பீடம் மற்றும் சுமார் 360 தூண்களில் வேலைப்பாடுகள் உட்பட இரண்டாம் கட்டம் டிசம்பர் 2024க்குள் முடிக்கப்படும். மூன்றாவது கட்டத்தில், 71 ஏக்கர் நிலப்பரப்பு, ஆடிட்டோரியங்கள் மற்றும் வெண்கல சுவரோவியங்கள் மற்றும் சப்தரிஷிகளின் கோவில்கள் போன்றவற்றைக் கொண்ட பார்கோட்டா உட்பட, டிசம்பர் 2025க்குள் கட்டி முடிக்கப்படும்.
ஜனவரி 27ல் வைக்கப்படும் ராமர் சிலை
ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவுக்கு முன்னர், கோவிலுக்குள் வைக்கப்படும் இராம் லல்லா(குழந்தை இராமர் சிலை) தேர்வு செய்யப்படும். அயோதியின் மூன்று இடங்களில் இச்சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜனவரி 27ஆம் தேதி காலை, பிரதமர் மோடி முன்னிலையில் தேர்வு செய்யப்படும் சிலை கோவிலுக்குள் வைக்கப்படும். மூன்று சிலைகளும் 51 இன்ச் நீளத்தில், ராமர் கையில் வில்லுடன் இருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. பீடத்துடன் இச்சிலை 7அடி உயரம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 25 அடி தொலைவில் இருந்து, பக்தர்கள் தரிசிக்க இந்த உயரத்தில் சிலை இருப்பது அவசியம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரம்மாண்ட நகரமாகும் அயோத்தி
2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர், சாதாரண நகரமாக இருந்த அயோதி தற்போது ஒரு நாளைக்கு 50,000 முதல் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வரை கையாளும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ₹50,000 கோடி நிதி ஒதுக்கி உள்ள மத்திய அரசு, அங்கு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ராமர் கோயிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பணிகள், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்பட இப்போதைக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.