
கெஜ்ரிவாலின் ஐபோனை திறக்க வேண்டுமென்ற EDஇன் கோரிக்கையை ஆப்பிள் நிராகரித்தது ஏன்?
செய்தி முன்னோட்டம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனை அன்லாக் செய்வதற்காக உதவி கேட்ட அமலாக்க இயக்குநரகத்தின் கோரிக்கையை, ஆப்பிள் நிறுவனம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மதுபான ஊழல் வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக கெஜ்ரிவாலின் ஐபோனை திறக்க ED ஆப்பிள் நிறுவனத்தை அணுகியதாக கூறப்படுகிறது.
மத்திய ஏஜென்சிக்கு உதவ விரும்பவில்லை என்பதை விட அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் கடுமையான பயனர் பாதுகாப்பு கொள்கைகளே இதற்கு முக்கிய தான் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அமெரிக்கா அல்லாத அரசு மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கான "சட்ட செயல்முறை வழிகாட்டுதல்கள்" அத்தகைய கொள்கைகளில் ஒன்றாகும்.
அதன்படி லாக் செய்யப்பட்ட iOS சாதனங்களுக்கு பாஸ்வார்ட்களை வழங்குவதை நிறுவனம் தடை செய்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவால்
கைது செய்யப்பட்ட அன்று கெஜ்ரிவால் தனது ஐபோனை அணைத்துவிட்டார்
மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோது, அவர் தனது போனை அணைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு அவர் தனது ஐபோனுக்கான கடவுச்சொல்லை பகிர மறுத்துவிட்டார்.
ED தனது தொலைபேசியை அணுகினால், ஆம் ஆத்மியின் "தேர்தல் உத்தி" மற்றும் கூட்டணி விவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று அவர் கருதுகிறார்.
ஆப்பிளின் கொள்கையின்படி, பயனரின் அனுமதியின்றி ஐபோனைத் திறக்க முடியாது.
அதாவது, கெஜ்ரிவாலின் அனுமதியின்றி அவரது போனை திறக்கமுடியாது.
எனினும், ED கோரிக்கைக்கு அனைத்து சட்ட கோரிக்கைகளையும் கவனமாக மதிப்பாய்வு செய்வதாக ஆப்பிள் கூறுயுள்ளது.
உலகின் எந்த அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கும் பதிலளிக்க ஒரு 24/7 அவசரகால பிரத்யேக குழுவை நியமித்துள்ளது ஆப்பிள். அதேநேரத்தில் எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்கும் உரிமையையும் நிறுவனம் கொண்டுள்ளது.