UK விற்கு படிக்க செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜகவை வழிநடத்த போவது யார்?
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை UKவில் சில மாதங்கள் தங்கி மேற்படிப்பு படிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. அண்ணாமலை, ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், தலைமைத்துவம் மற்றும் சிறப்பிற்கான செவனிங் குருகுல ஃபெல்லோஷிப் ப்ரோக்ராமில் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று மாத கால படிப்பில் கலந்துகொள்ள சில காலம் அரசியலிலிருந்து ஓய்வு எடுக்கவேண்டுமென அண்ணாமலை தேர்தலுக்கு முன்பே முடிவு செய்துவிட்டதாகவும் டைம்ஸ் நவ் தெரிவிக்கிறது. இதுகுறித்து கட்சி மேலிடத்தின் அனுமதிக்காக அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
அண்ணாமலைக்கு பதிலாக அடுத்த தலைமை முடிவு?
இது குறித்து மாநில பாஜக கட்சியின் துணைத்தலைவர் நாகராஜன் கூறுகையில், இந்த படிப்பிற்கு இந்தியாவிலிருந்து தேர்வான 12 நபர்களில் அண்ணாமலையும் ஒருவர் என பெருமிதத்துடன் கூறினார். இருப்பினும், அண்ணாமலை இல்லாத போது, கட்சியின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட வேறு தலைவர் நியமிப்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் எனவும் அவர் கூறினார். மாநில பாஜக தலைவராக அண்ணாமலையின் பதவிக்காலமும் இந்த ஜூலை 12 ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா அல்லது இந்த இடைப்பட்ட காலத்திற்கு, இடைக்கால தலைமை அறிவிக்கப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை. இதற்கிடையே மாநில பாஜகவினரிடையே தேர்தல் தோல்வியினால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உட்கட்சி பூசல் துவங்கும் அபாயமும் உள்ளது என்பது மறுப்பதற்கில்லை.