ஒரே பாலின திருமணம் இந்தியாவில் அங்கீகரிக்கப்படுமா? இன்னும் 5 நாட்களுக்குள் தீர்ப்பு
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். கடந்த ஜூன் மாதம், இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்து, திருமண சமத்துவத்திற்கு வழிவகுத்த முதல் தென் ஆசிய நாடு என்ற பெயரை பெற்றது. இந்நிலையில், ஒரே பாலின திருமண விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்தது. அதற்கான தீர்ப்பு இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 20ஆம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு
இந்திய தலைமை நீதிபதி(CJI) டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ் ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, பத்து நாள் மாரத்தான் விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கின் தீர்ப்பை மே 11ஆம் தேதி அன்று ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பட், வரும் அக்டோபர் 20ஆம் தேதி அன்று ஓய்வு பெறுவதால், அதற்குள் ஒரே பாலின திருமணத்திற்கான தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் வழங்க இருக்கும் தீர்ப்பு பால்புதுமையினர் சமூகத்திற்கு(LGBTQIA+) சார்பாக இருந்தால், அது உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் திருமண சமத்துவத்திற்கு வழிவகுக்கும்.
ஒரே பாலின திருமணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு
உலகெங்கிலும் உள்ள 35 நாடுகள் ஒரே பாலின திருமணத்தை ஏற்கனவே அங்கீகரித்துள்ளன. சர்வதேச அளவில், LGBTQIA+ நபர்களின் உரிமைகள் நீண்ட காலமாக அரசியல், கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் இருக்கும் முக்கியப் பிரச்சினைகளாக கருதப்படுகின்றன. ஆனால், இந்தியா போன்ற உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளில் வலதுசாரி அரசாங்கங்களின் கொள்கைகள் வேரூன்றியுள்ளதால், இந்த பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் முன்பைவிட சூடுபிடித்துள்ளன. இதற்கிடையில், இந்திய அரசு திருமண சமத்துவத்தை அங்கீகரிக்கக்கூடாது என்று கடுமையான வாதங்களை முன்வைத்து வருகிறது. ஒரே பாலின திருமணம் என்பது நாட்டின் சமூக நெறிமுறைகளுக்கு எதிரான ஒரு "நகர்ப்புற உயரடுக்கினரின் கருத்து" என்று உச்ச நீதிமன்ற விசாரணையின் போது மத்திய அரசு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பு தெரிவிக்கும் சட்டம் இயற்றுபவர்கள்; நீதி கேட்கும் மனுதாரர்கள்
இதில் இருக்கும் பெரிய பிரச்சனை என்னவென்றால், உச்ச நீதிமன்றம் புதிதாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என்றால் அதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் மட்டுமே சட்டம் இயற்றுவதற்கான முழு உரிமையும் இருக்கிறது. ஆனால், ஒரே பாலின திருமணத்தை ஆதரிக்கும் சட்டத்தை இந்திய அரசு இயற்ற வேண்டும் என்றால் தற்போதைய சூழ்நிலையில், அதற்கு பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதனால், ஏற்கனவே இருக்கும் சிறப்பு திருமண சட்டத்தில்(மதசார்பற்ற திருமண சட்டம்) சிறு சிறு மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் உச்ச நீதிமன்றம் இதற்கு ஒரு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்று மனுதாரர்கள் வாதித்திட்டுள்ளனர்.
என்ன தீர்ப்பு வழங்கப்படும்?
ஒரே பாலின திருமணத்திற்கு மத்திய அரசு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், உச்ச நீதிமன்றம் இதற்கு எந்த மாதிரியான தீர்ப்பு வழங்கும் என்பதை சட்ட வல்லுநர்களால் சரியாக கணிக்க முடியவில்லை. எனினும் இதற்கு இரண்டு சாதியக்கூறுகள் இருக்கின்றன. முதல் சாத்தியக்கூறு: சிறப்பு திருமண சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆண்/பெண்(அவள்/அவன்) என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு, பாலினம்-சாராத வார்த்தைகள்(அவர்/நபர்) சேர்க்கப்படும். திருமண சமத்துவத்தை அங்கீகரிக்கக்கூடிய வகையில், ஒரே பாலின தம்பதிகள் திருமணத்தை சட்டபூர்வமாக பதிவு செய்ய வழிவகை செய்யப்படும். இரண்டாவது சாத்தியக்கூறு: ஒரே-பாலின திருமண விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, இது தொடர்பான மனுக்கள் நிராகரிக்கப்படும். ஆனால், தீர்ப்பு என்னவாக இருந்தாலும், சமத்துவத்தை அடைவதற்கான இந்த போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்கின்றனர் மனுதாரர்கள்.