'கேரள ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?': உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு இரண்டு ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காமல் இருப்பது குறித்து நேற்று பேசிய உச்ச நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், ஆளுநர்கள் எப்போது மசோதாக்களை இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை வகுப்பது குறித்து பரிசீலிக்க இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, எட்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்திக்குமாறு கேரள ஆளுநரிடம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கேரள சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களுக்கு கேரள ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்ததை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
டவ்ஜ்கஃபிக்
தமிழகத்தை தொடர்ந்து கேரள அரசின் மனுவையும் விசாரித்த உச்ச நீதிமன்றம்
இந்நிலையில், கேரள அரசின் மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த விவாகரத்தில் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
ஆளுநர் அலுவலகம் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, எட்டு மசோதாக்களில் ஏழு மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் கூறினார்.
அதனையடுத்து, "இரண்டு ஆண்டுகளாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்?" என்று நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியது.
மேலும், இந்த விஷயத்தில் ஆளுநர் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் இல்லையென்றால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.