LOADING...
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் திடீர் ராஜினாமா: அடுத்து என்ன நடக்கும்? அவருக்கு மாற்று யார்?
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் திங்கட்கிழமை மாலை திடீரென ராஜினாமா செய்தார்

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் திடீர் ராஜினாமா: அடுத்து என்ன நடக்கும்? அவருக்கு மாற்று யார்?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 22, 2025
08:49 am

செய்தி முன்னோட்டம்

இந்திய துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர் திங்கட்கிழமை மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல்நலக் காரணங்களைக் குறிப்பிடும் அவரது இந்த முடிவு, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளிலேயே வெளியானதால், அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தில், "சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதற்காக உடனடியாக பதவி விலகுகிறேன்," என்று தெரிவித்திருந்தார். மாநிலங்களவை தலைவராக அடுத்த சில முக்கிய அமர்வுகளில் பங்கேற்க உள்ளதாக இருந்த நிலையில் அவரது பதவி விலகல் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல்

துணை ஜனாதிபதி தேர்தல் 60 நாட்களில் நடக்கும்

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் 10 வரை இருந்த போதும், அதற்கு முன்பே அவர் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசியலமைப்பின் பிரிவு 64-ன் படி, புதிய துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்படும் வரை மாநிலங்களவை துணைத்தலைவரான ஹரிவன்ஷ் நாராயணசிங் செயல் தலைவர் பொறுப்பை வகிக்கவுள்ளார். மேலும், 60 நாட்களுக்குள் புதிய துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த தேர்தலில் மக்களவையும், மாநிலங்களவையையும் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் வாக்களிக்கின்றனர். விகிதாசார பிரதிநிதித்துவ முறை மற்றும் ஒற்றை மாற்ற வாக்கு முறையின் கீழ் ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும்.

பரிசீலனை

புதிய துணை ஜனாதிபதியாக யார்?

அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற கேள்வி தற்போது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலில் முதன்மையான பெயராக ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளார். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக கருதப்படும் இவர், கடந்த வாரம் மோடியை நேரில் சந்தித்ததுடன், சமீபத்தில் ஸ்ரீநகரில் நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டார். மேலும், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, பீகார் ஆளுநர் ஆரிப் முகமது கான், முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டங்கள்

அரசியலமைப்பு சட்டம் கூறுவது என்ன?

துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படும் நபர், இந்திய குடிமகனாகவும், குறைந்தபட்சம் 35 வயதைக் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்க தகுதியுடையவராக இருக்கவேண்டும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), பெரும்பான்மையுடன் இருக்கும் நிலையில், விரைவில் புதிய வேட்பாளர் குறித்த இறுதி முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.