டொனால்ட் டிரம்ப் உடனான மோடியின் சந்திப்பு எப்போது? மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவர் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திப்பார் என்பது குறித்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தவில்லை. அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்கப்போவதாக டிரம்ப் அறிவித்ததையடுத்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் இருந்து விளக்கம் வந்தது. செப்டம்பர் 20 அன்று மிச்சிகனில் நடந்த டவுன் ஹால் கூட்டத்தின் போது பேசிய டிரம்ப், "மோடி, அவர் அற்புதமானவர். அதாவது, அற்புதமான மனிதர்" என்று புகழாரம் சூட்டி இருந்தார். இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்காவில் பிரதமர் மோடியின் சந்திப்பு திட்டங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பு
மத்திய வெளியுறவுத் துறையின் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் சாத்தியமான சந்திப்பு கூட்டாளர்களை உள்ளடக்கிய அனைத்து அம்சங்களையும் அவர்கள் பரிசீலித்து வருவதாக கூறினார். இருப்பினும், டிரம்ப்புடனான உறுதியான சந்திப்பு குறித்து அவர் எந்த குறிப்பிட்ட தகவலையும் வழங்கவில்லை. பிரதமர் மோடி செப்டம்பர் 21 முதல் 23 வரை மூன்று நாள் பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார். டெலாவேரில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் நடத்தும் குவாட் லீடர்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வது மற்றும் நியூயார்க்கின் லாங் ஐலேண்டில் ஒரு சமூக நிகழ்வில் உரையாற்றுவது ஆகியவை அவரது பயணத்திட்டத்தில் அடங்கும். ஐ.நா தலைமையகத்தில் நடைபெறும் எதிர்கால நிகழ்வின் முக்கிய உச்சி மாநாட்டிலும் அவர் பேசுவார்.