இடைக்கால பட்ஜெட் 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று என்ன அறிவிக்கக்கூடும்? எதிர்பார்ப்புகள் என்ன?
இன்னும் சில மாதங்களில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்திய தேர்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில்,மத்திய அரசின் இறுதி அஸ்திரமாக தேர்தல் களத்தை அமைக்கும் வகையில் நிர்மலா சீதாராமன் அறிவிக்கவிருக்கும் திட்டங்கள் எவ்வாறு இருக்கும் என அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இது ஒரு இடைக்கால பட்ஜெட் என்றாலும், பொருளாதார வல்லுனர்களும், நிபுணர்களும் இதை ஒரு நிதிநிலை அறிக்கையை விட அதிகம் என்று கருதுகின்றனர். நிர்மலா சீதாராமன், மத்திய அரசு இந்தியாவை வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவதற்கு எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பது குறித்த விரிவான பொருளாதார வரைபடத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் உரையில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
விவசாயம்: கடந்த ஆண்டு பயிர்களுக்கு ஏற்றுமதி தடை மற்றும் மழைப்பொழிவு விளைச்சலைப் பாதித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு அதிக நிதியுதவி கிடைக்கலாம். உரங்கள் மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியங்களும் அடங்கும். வேலை உருவாக்கம்: வேலைவாய்ப்பின்மை ஒரு முக்கியமான கவலையாக இருப்பதால், இந்த பட்ஜெட், வேலை உருவாக்கத்தில் கவனம் செலுத்தும். அதில் துறைசார்ந்த முதலீடுகளும் அடங்கும். உள்கட்டமைப்பு: பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் சாலைகள், ரயில்வே மற்றும் டிஜிட்டல் முன்முயற்சிகளில் அரசாங்கம் தனது செலவினங்களைத் தொடர வாய்ப்புள்ளது. வருமான வரி: உயர் பணவீக்கத்தின் தாக்கத்திற்கு நிவாரணமாக, வரி செலுத்துவோருக்கு சில புதிய வருமான வரி விதி விலக்குகள் தரப்படலாம். மேலும் பல முதலீடுகளும், சலுகைகளும் அறிவிக்கப்படும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.