உச்ச நீதிமன்றம் ரத்து செய்த ஜம்மு-காஷ்மீரின் சட்டப்பிரிவு 370-இல் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் என்னென்ன?
நேற்று உச்ச நீதிமன்றம், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, 2019 மத்திய அரசால் நீக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 சரியே என்றது. சரி, அது என்ன சட்டப்பிரிவு 370? அதன்கீழ் இந்த மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்துகள் என்னென்ன? எதற்காக இந்த தீர்ப்பை பாகிஸ்தான் அரசும், காஷ்மீர் அரசியல் தலைவர்களும் எதிர்க்கின்றனர்? இந்த கேள்விக்கு பதில், இந்த கட்டுரையில். தொடர்ந்து படியுங்கள். ஜம்மு காஷ்மீரில் 2019 வரை நடைமுறையில் இருந்த 370-ஆவது சட்டப் பிரிவானது, 1949-ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது. அதன்படி, ராணுவம், வெளியுறவுத் துறை, தகவல் தொடர்பு துறை ஆகியவற்றை தவிர, பிற துறைகள் தொடர்பாக நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் இம்மாநிலத்தின் சம்மதம் இல்லாமல் இயற்றினால் அது பொருந்தாது.
வேறு என்ன சிறப்பு சலுகைகள் உண்டு?
சட்டவிதி எண் 370-இன் படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லையை நீடிக்கவோ, குறைக்கவோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. அதாவது, அந்த மாநிலத்தின் எல்லைகளை வரையறுக்க இந்தியா அரசிற்கு உரிமை இல்லை. இதனால் தான், அண்டை நாடுகள் ஆக்கிரமிக்கும் போது, நாம் சர்வேதேச நீதிமன்றத்தினை அணுக நேர்ந்தது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில், பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துகளை வாங்க முடியாது. ஆனால் இவர்கள் பிற மாநிலங்களில் சொத்துக்கள் வாங்க அனுமதி உண்டு. இந்த சட்டத்தினை மாற்றவோ, நீக்கவோ, ஜம்மு- காஷ்மீர் சட்டசபை நினைத்தால் மட்டுமே முடியும். அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அறிவுறுத்தலின்படி, இந்த சட்டத்தினை முழுவதுமாக நீக்க ஜனாதிபதி உத்தரவிட வேண்டும்
உட்பிரிவான சட்டப்பிரிவு 35 ஏ என்ன சொல்கிறது?
இந்த சட்டத்தின் உட்பிரிவான சட்டப்பிரிவு 35-ஏ படி, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வாழ்பவர்களின் நிரந்தர குடியிருப்பாளர்கள் யார் என்பதையும், அவர்களுக்கு அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு, அரசு உதவித் தொகை வழங்குதல் மற்றும் அசையாச் சொத்துகள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற உரிமைகள் உள்ளது. மேலும் இந்த சட்டத்தின்படி இந்த மாநிலத்தை சாராதவர்களுக்கு இங்குள்ள நிறுவனங்களில் வேலை மறுக்கப்படுகிறது. அதுபோல் காஷ்மீர் மாநில பெண் வேறு மாநில நபரை திருமணம் செய்து கொண்டால், அந்த பெண்ணுக்கு சொத்தில் உரிமை இல்லை. இப்படியான சட்டத்தினை தான் மத்திய அரசு நீக்கியுள்ளது. அது நீக்கியது செல்லும் என்றும், இந்தியா நாட்டுடன் இணைந்த பின், தனியாக எதற்காக சிறப்பு சலுகைகள் என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.