தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்தது; ஆனால் அவர் வழக்கறிஞராக தொடர முடியாது....!
திங்களன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற விழாவில், நீதிபதி சஞ்சீவ் கண்ணா 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அதே நேரத்தில், முன்தினம், நவம்பர் 10 அன்று அப்போதைய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பணி ஓய்வு பெற்றார். சரி அவர் அடுத்து நீதித்துறையில் தனது சேவையை தொடர்வாரா என்ற கேள்விக்கு பதில் - அரசியலமைப்பின் 124(7) பிரிவின்படி, தலைமை நீதிபதி மற்றும் பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, எந்தவொரு இந்திய நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்ற முடியாது. அதனால், டிஒய் சந்திரசூட் தனது வக்கீல் பணியினை தொடர முடியாது.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்ன செய்யலாம்?
முன்னாள் SC நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டாலும், அவர்கள் மற்ற பணிகளில் ஈடுபட தடை இல்லை. ஓய்வுபெற்ற நீதிபதிகள் பெரும்பாலும் பல்வேறு தகராறுகளில் நடுவர்களாக (Arbitrator)பங்கு கொள்ளலாம். இந்திய சட்ட ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் போன்ற பல்வேறு கமிஷன்கள் மற்றும் தீர்ப்பாயங்களின் தலைவர்கள் அல்லது உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடிக்கடி பணியாற்றுகின்றனர். பல ஓய்வுபெற்ற நீதிபதிகள் சட்டப் பள்ளிகளில் கற்பித்தல், விரிவுரைகள் வழங்குதல் ஆகியவற்றின் மூலம் சட்டக் கல்வித் துறையில் பங்களிக்கின்றனர். சில ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஒரு மாநிலத்தின் ஆளுநர் அல்லது பல்வேறு அரசாங்கக் குழுக்கள் மற்றும் கமிஷன்களின் தலைவர்கள் போன்ற அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ பதவிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
அரசாங்கத்தின் பாதுகாப்பு வழங்கப்படும்
விதிகளின் சமீபத்திய மாற்றங்களின்படி, ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு 24X7 தனிப்பட்ட பாதுகாப்புக் காவலருடன் அவரது இல்லத்தில் 24 மணிநேரமும் பாதுகாப்புப் பெறுவர். ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்கு டெல்லியில் வாடகை-இல்லா வகை-VII தங்குமிடத்திற்கு உரிமை உண்டு. பொதுவாக முன்னாள் மத்திய அமைச்சர்களாக இருந்த எம்.பி.க்களுக்கு மட்டுமே இந்த VII வகை தங்கும் வசதிகள் வழங்கப்படும். இந்த மாத தொடக்கத்தில் இருந்து இந்த வசதி ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் வீட்டு உதவியாளரையும், ஓட்டுநரையும் பெறுவார். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு விமான நிலையங்களில் உள்ள லௌஞ்ச் வசதியும் தொடரும். இலவச வீட்டுத் தொலைபேசி இணைப்பு உண்டு.