இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம்
அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது மேற்கு வங்காளம். ஒரு குறிப்பிட்ட பட்டாசு பசுமைப் பட்டாசா இல்லையா என்பதைக் கண்டறிய QR கோடுகளும் பட்டாசில் அச்சிடப்பட்டிருக்கின்றன. பசுமைப் பட்டாசுகளைத் தவிர்த்த பிற வகையான பட்டாசுகளை மேற்கு வங்காளத்தில் விற்பனை செய்யத் தடை செய்யப்பட்டிருப்பதோடு, அவற்றை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவிருக்கிறது. பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் கடந்த ஆண்டே கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், இந்த ஆண்டும் தொடர்ந்து அது கடைப்பிடிக்கப்படவிருக்கிறது.
பசுமைப் பட்டாசுகள் என்றால் என்ன?
காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில் உருவாக்கப்படும் பட்டாசுகளையே பசுமைப் பட்டாசுகள் என அழைக்கின்றனர். சாதாரண பட்டாசுகளில் பேரியம் என்ற வேதிப்பொருளின் கலவை இடம்பெற்றிருக்கும். இந்த வேதிப்பொருளே, ஒரு பட்டாசின் ஒலி மற்றும் காற்று மாசுவுக்கு காரணமாக அமைகிறது. பசுமைப் பட்டாசுகளில் இந்த பேரியம் வேதிப்பொருளின் பயன்பாடு இருக்காது. புகை மற்றும் ஒலி மட்டுமால்லாது இந்த பசுமை பட்டாசுகள் தூசியையும் அதிகளவில் உற்பத்தி செய்யாது. முக்கியமாக காற்று மாசுவுக்கு காரணமாக இருக்கும் நுண்துகள்களை சுத்தமாக வெளியிடாது. எனவே தான் பல்வேறு மாநிலங்களிலும் தீபாவளியன்று இந்த பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்த மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
வெளி மாநிலங்களில் இருந்து பட்டாசு இறக்குமதி:
நாளை (நவம்பர் 6) முதல் நவம்பர் 12ம் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது மேற்கு வங்காள அரசு. மேலும், பட்டாசு தயாரிப்பின் போது தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு விபத்துகளினால் பட்டாசு உற்பத்தியை மூன்று மாத காலம் நிறுத்தி வைத்தது மேற்கு வங்காளம். அதன் காரணமாக தற்போது அம்மாநில பட்டாசுத் தேவையில் 40% மட்டுமே உள்மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. கூடுதலான பட்டாசுத் தேவைக்கு வெளிமாநிலங்களில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்யத் திட்டமிட்டிருக்கிறது மேற்கு வங்காளம்.